சேலம் ரயிலில் 5.78 கோடி ெகாள்ளை நடந்தது எப்படி? 6 முறை நோட்டமிட்ட பின்னரே கூரையில் துளையிட்டு கொள்ளை

சேலம்: சேலம் ரயிலில் 5.78 கோடி கொள்ளை சம்பவத்தில், குறிப்பிட்ட ரயிலில் பணம் கொண்டு செல்வதை 6 முறை நோட்டமிட்டு 7வது முறையாக கொள்ளையடித்ததாக கும்பல் தலைவன் கூறிய திடுக்கிடும் தகவலை போலீசார் தெரிவித்தனர்.  சேலத்தில் இருந்து கடந்த 2016 ஆகஸ்ட் மாதம் சென்னைக்கு ரயில் மூலம் 342 கோடி கிழிந்த ரூபாய் நோட்டுகள் கொண்டு செல்லப்பட்டது. இதில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த கொள்ளை கும்பல் ரயிலின் மேற்கூரையை துளையிட்டு,5.78 கோடியை கொள்ளையடித்து சென்றது. இது தொடர்பாக சென்னை சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 2 ஆண்டுகளாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாத நிலை இருந்தது.

சேலம் சிபிசிஐடி டிஎஸ்பி கிருஷ்ணன் உள்பட தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். இதில், வடமாநிலத்தை சேர்ந்த கொள்ளை கும்பல் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. டிஎஸ்பி கிருஷ்ணனுக்கு இந்தி, ஆங்கிலம், மராத்தி, குஜராத்தி, கொங்கணி ஆகிய மொழிகள் தெரியும் என்பதால், வடமாநிலம் சென்று தீவிர விசாரணை நடத்தினார். இதில், மத்திய பிரதேசத்தை சேர்ந்த மோஹர் சிங் தலைமையிலான கும்பல் கொள்ளையடித்தது தெரியவந்தது. இதையடுத்து தினேஷ் (38), ரோகன் (29), காளியா (எ) கபு, மகேஷ், ருசி, பிலிப்தியா (எ) பர்ஜிமோகன் மற்றும் கும்பல் தலைவன் மோஹர்சிங் ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

இவர்களை 14 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் மீண்டும் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் கொள்ளை கும்பல் பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மோஹர் சிங்கின் உடன் பிறந்தோர் அனைவரும் கொள்ளையடிப்பதை தொழிலாக கொண்டவர்கள். பஞ்சாப் மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை கொலை செய்து கொள்ளையடித்த வழக்கில் மோஹர் சிங்கின் அண்ணன் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றொரு அண்ணனுக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது. இவர்கள் கொள்ளையடிப்பது குறித்து போலீசாருக்கு தகவல் சொன்னதாக 2 பேரை மோஹர்சிங் சுட்டுக்கொன்றான்.

அதன்பிறகு மனைவியுடன் மோஹர்சிங் தலைமறைவானான். தமிழ்நாடு, ஆந்திரா போன்ற மாநிலங்களில் ரயில்நிலைய ஓரங்களில் தங்கி கொள்ளையடித்து வந்துள்ளான். இந்நிலையில் சேலம் சூரமங்கலம் பகுதியில் கொட்டகை அமைத்து பொம்மை, பலூன் போன்றவற்றை விற்று வந்துள்ளான். அப்போதுதான் சேலத்தில் இருந்து சென்னைக்கு ரயிலில் பணம் கொண்டு செல்லப்படுவதை தெரிந்து கொண்டான். சேலத்தில் இருந்து 6 முறை பணம் கொண்டு செல்லப்படுவதை கண்காணித்தான். 2 முறை பணம் சென்ற ரயிலில் பயணம் செய்து நோட்டமிட்டுள்ளான். 7வது முறை கொள்ளையடிக்க முடிவு செய்த மோஹர்சிங், தனது கூட்டாளிகளை ஒருங்கிணைத்தான்.

சின்னசேலம்-விருத்தாசலம் பகுதியில் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்றதால் சுமார் 45 நிமிட நேரம் ரயில் மெதுவாக அதாவது, 15 கிலோ மீட்டர் வேகத்தில்தான் செல்லும். இதை பயன்படுத்தி ரயில் பெட்டியின் மேற்கூரையில் துளையிட்டுள்ளனர். ரயில் பெட்டி மீது ஏறிய இடம் சேலம் அயோத்தியாப்பட்டணம். இங்கு ரயில் நின்றபோதுதான் 2 பேர் ரயிலில் ஏறி மேற்கூரைக்கு சென்றுள்ளனர். மேலேயே படுத்துக் கொண்ட அவர்கள் சரியான நேரத்தில் பெட்டியை துளையிட்டுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ரயில்பெட்டி மீது இவர்கள் இருந்ததை 3 கல்லூரி மாணவர்கள் பார்த்துள்ளனர். இது தொடர்பாக அந்நேரத்தில் போலீசார் நடத்திய விசாரணையிலும் தெரியவந்தது. அது தற்போது உறுதியாகியுள்ளது. இதுபற்றி ெதாடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

* கடந்த 2016 ஆகஸ்ட் மாதம் சேலத்தில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் 342 கோடி கொண்டு செல்லப்பட்டது

* ர2 ஆண்டுகளாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் சிபிசிஐடி திணறியது

* ரயிலின் மேற்கூரையை துளையிட்டு,5.78 கோடியை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது

* தீவிர விசாரணைக்குப் பின் ம.பி.யைச் சேர்ந்த கொள்ளை கும்பல் சிக்கியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: