மகாராஷ்டிராவில் 74 சதவீதம் மழை பெய்தும் 14,000 கிராமங்களில் வறட்சி: ஆய்வறிக்கையில் தகவல்

மும்பை: இந்த ஆண்டு மகாராஷ்டிராவில் சராசரியாக 74.3 சதவீதம் மழை பெய்திருக்கிறது. இருந்தாலும் மாநிலத்தின் சில பகுதிகளில் கடும்  வறட்சி காணப்படுகிறது.  ‘நிலத்தடி நீர் ஆய்வு மற்றும் மேம்பாட்டு ஏஜென்சி’ (ஜிஎஸ்டிஏ) வெளியிட்டிருந்த தகவல்களின்படி, மாநிலத்தில் கடந்த  2014ம் ஆண்டில் 70.2 சதவீதம் மழைதான் பெய்தது. அந்த சமயத்தில் 5,976 கிராமங்கள்தான் வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்தது. அதாவது இந்த  கிராமங்களில் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. இதேபோல 2015ம் ஆண்டில் மாநிலத்தில் சராசரியாக 59.4 சதவீதம் மழை பெய்தது. வறட்சியால்  பாதிக்கப்பட்ட கிராமங்களின் எண்ணிக்கை 13,571 ஆக இருந்தது.

ஆனால் ஜிஎஸ்டிஏ ஏஜென்சி 2018ம் ஆண்டு வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இந்த ஆண்டில் 74.3 சதவீதம் மழை பெய்திருந்தும் மாநிலத்தின் 252  தாலுகாக்களை சேர்ந்த 13,984 கிராமங்கள் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் இரண்டாவது  நீர்ப்பாசன கமிஷன் செயலாளர் டி.எம்.மோரே இது குறித்து கூறுகையில், “மாநிலத்தில் இந்த ஆண்டில் நிலத்தடி நீர் குறைந்த கிராமங்களின்  எண்ணிக்கை அதிகரித்ததற்கு பல காரணங்கள் சொல்லப்படலாம். ஆனால், மழைநீரை சேமிக்க நாம் தவறி விட்டோம். அதனால்தான் இந்த ஆண்டு  போதிய மழை பெய்தும் வறட்சி கிராமங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது” என்றார்.

இதற்கிடையே தற்போதைய வறட்சி சூழலில், மாநில அரசின் ஜல்யுக்த் ஷிவர் யோஜனா எனப்படும் தண்ணீர் சேமிப்பு திட்டத்தை காங்கிரஸ் கட்சி  குறைகூறியிருக்கிறது. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சச்சின் சாவந்த் இது குறித்து கூறியதாவது: மாநிலத்தில் நிலத்தடி நீரின் அளவு மிக மிகக்  குறைந்து விட்டது. சுமார் 13,984 கிராமங்களில் நிலத்தடி நீர் 1 மீட்டருக்கும் மேல் குறைந்து விட்டதாக ஜிஎஸ்டிஏ ஏஜென்சியின் ஆய்வு கூறுகிறது.  மாநில அரசின் ஜல்யுக்த் ஷிவர் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் பாராட்டி பேசியிருந்தார்.

அரசின் இந்த திட்டத்தினால் 16,000 கிராமங்கள் வறட்சியில் இருந்து விடுபட்டுள்ளதாகவும் மேலும் 9,000 கிராமங்கள் வறட்சியின் பிடியில் இருந்து  விடுபட்டு வருவதாகவும் பிரதமர் மோடி பேசியிருந்தார். அதன் பிறகுதான் இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: