5 லட்சம் தொழிலாளர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பட்டாசு தொழிலாளர் பிரச்னை தீர்க்க மத்திய, மாநில அரசுகள் முன்வரவில்லை: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: உச்ச நீதிமன்ற தீர்ப்பால் 5 லட்சம் பட்டாசு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பிரச்னையை தீர்க்க மத்திய, மாநில அரசுகள்  முன்வரவில்லை என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.  சென்னை பல்லாவரத்தில் நேற்று, திமுக பிரமுகர் இல்ல திருமணத்தை திமுக  தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார். அவர் பேசியதாவது: நாட்டில் இன்று இருக்கும் பிரச்னைகளை மறந்து  விடக்கூடாது, மத்தியில் ஒரு ஆட்சி நடக்கிறது, மாநிலத்தில் ஒரு ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. 2 தினங்களுக்கு, முன்பு ஆந்திர முதல்வர் சந்திரபாபு  நாயுடு சென்னை வந்து என்னை சந்தித்த போது, அவரிடம் தமிழ்நாட்டில் இருக்கும் ஆட்சி பற்றி சொல்லுங்கள் என்று நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு ஒரே வரியில் ஆட்சி என்ற ஒன்று இருக்கிறதா? என்றார். இதைவிட கேவலம், வெட்கம் இந்த ஆட்சிக்கு தேவையில்லை. காரணம், ஒரு  கிரிமினல் கேபினட் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. முதல்வர் சி.பி.ஐ விசாரணையில் சிக்கியிருக்கிறார். துணை முதல்வர் பல  குற்றச்சாட்டுகளில் சிக்கியிருக்கிறார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், குட்கா புகழ், இப்பொழுது டெங்கு புகழ் வருமான வரித்துறையிடம்  சிக்கியிருக்கிறார். தங்கமணி, வேலுமணி இப்படி பல அமைச்சர்கள். ஒரு கிரிமினல் கேபினட் அமைந்துள்ளது. இந்த ஆட்சி என்று ஒழியும் என்று மக்கள்  காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த ஆட்சி தப்பித்து நிலைத்திருப்பதற்கு காரணம் மத்தியில் இருக்கிற ஆட்சி. எது வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று ஓப்பனாக  விட்டிருக்கிறார்கள், பிரதமரைப் பற்றி கேட்க வேண்டிய அவசியம் இல்லை. மோடிக்கு சோசலிசம், ஜனநாயகம், மதச்சார்பின்மை பிடிக்காது. வெளிநாடு  வாழ் பிரதமர் யார் என்று கேட்டால் அது மோடிதான். 84 நாடுகளுக்கு போய் வந்த அவருக்கு செலவு செய்த தொகை 1500 கோடி, அது அவர் சொந்த  பணமா? மக்களுடைய வரிப்பணம். உலகம் சுற்றும் வாலிபனைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறோம். இன்று உலகம் சுற்றும் பிரதமராக மோடி  விளங்குகிறார்.  நாட்டில் எங்கு பார்த்தாலும் போராட்டம், ஆர்ப்பாட்டம்.

1100 பட்டாசு தொழிற்சாலைகள் மூடப் போவதை எதிர்த்து போராட்டம் நடத்துகிறார்கள். 5 லட்சம் ஊழியர்கள் சுப்ரீம் கோர்ட்  தீர்ப்பின் அடிப்படையில்  தொழில் செய்ய முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்த பிரச்னையில் மத்திய அரசும், மாநில அரசும் தலையிட்டு சுமுகமான தீர்வு  ஏற்படுத்த வேண்டும். இந்த அரசு முற்படுகிறதா என்றால் இல்லை.   பிரதமர் மோடி நினைவெல்லாம் அதானி, அம்பானி. இங்கு இருப்பவர்கள்  நினைவெல்லாம் கமிஷன் கலெக்சன் கரெப்சன். இதற்கெல்லாம் முடிவு கட்டும் நேரம் விரைவில் வந்து கொண்டிருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வரப்போகிறது. அதற்கிடையில் 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது வரும் என்று எதிர் நோக்கி  காத்திருக்கிறோம். ஒருவேளை நாடாளுமன்ற தேர்தலும் சட்டமன்ற தேர்தலும் ஒன்றாக வந்தால் கூட ஆச்சரியப்பட வேண்டிய அவசியம் இல்லை.

உங்களுக்கு பணியாற்ற உறுதி எடுத்துக் கொண்டு கலைஞர் வழியில் பாடுபட நாங்கள் தயாராக இருக்கிறோம். அதற்கு நீங்கள் என்றைக்கும்  உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: