வாடிக்கையாளர்களின் விருப்பம் இல்லாமலேயே போலி கையெழுத்து போட்டு பாலிசி கட்ட வைத்த ஏஜென்ட்கள்

புதுடெல்லி: வாடிக்கையாளர்களின் விருப்பம் இல்லாமலேயே போலி கையெழுத்து போட்டும், அதிக பிரீமியம் பாலிசியை ஏஜென்ட்கள் கட்ட வைத்ததும்  அம்பலம் ஆகியுள்ளது.  தற்போதைய பரபரப்பான வாழ்க்கை முறையில் நோய்கள் அதிகம் வந்து விட்டன. இதனால் நோய் மற்றும் ஆயுள் காப்பீடு  பாலிசிக்களை எடுக்க வேண்டியது அவசியமான ஒன்றாகி விட்டது. அதிக வருவாய் ஈட்டும் சிலர் தேவை இல்லை என்றாலும் வரியில் இருந்து  தப்பிக்க பாலிசி எடுக்கின்றனர். பலருக்கு பாலிசி தேர்வு செய்ய தெரிவதில்லை. இவர்கள் ஏஜென்ட்களின் உதவியை நாடுகின்றனர்.

இத்தகையவர்களை ஏஜென்ட்கள் ஏமாற்றிய விவரம் தற்போது அம்பலமாகியுள்ளது. இவ்வாறு பாலிசி கட்டும் வாடிக்கையாளர்கள், அதற்கான பண  பலன்களை கோரும்போது சிக்கல் ஏற்படுகிறது. இத்தகைய வழக்குகள் தீர்ப்பாயத்தில் குவிந்து கிடப்பதாக கூறப்படுகிறது. காப்பீட்டாளர்களுக்கான  செயல் கவுன்சில் இதுதொடர்பான சில தகவல்களை வெளியிட்டுள்ளது.  சில ஏஜென்ட்கள் காப்பீடு படிவங்களில் விண்ணப்பதாரரின் கையொப்பத்தை  போட்டு தேவையில்லாத பாலிசியை கூட தலையில் கட்டி விடுகின்றனர்.

சிலர், துவக்க பாலிசி கட்டணத்தை குறைவாக செலுத்த செய்துவிட்டு, அதற்கு மேல் அதிகம் பிரீமியம் கட்டும் வகையில் பாலிசியை மாற்றி  விடுகின்றனர். இதனால் பாலிசி கட்டத்தொடங்கிய வாடிக்கையாளர்கள் பாதியில் அதை விடவும் முடியாமல் தொடர்ந்து கட்ட வேண்டிய நிலை  ஏற்படுகிறது.  பாலிசி போட்டவர்கள் தங்களது காப்பீடு பலன் கோரி விண்ணப்பம் செய்யும்போதுதான் மேற்கண்ட விவரங்கள் தெரிய வருகின்றன.  உடல் நலம் தொடர்பான காப்பீடுகளில் அவர்களுக்கு முன்பு இருந்த  நோய் விவரங்கள், உடல் பாதிப்புகள் ேபான்றவை சரிவர குறிப்பிடவில்லை. இது  பலன் கோரும்போது தடையாக வந்து விடுகிறது. இப்படி பல வழக்குகள் நிலுவையில் கிடக்கின்றன.

 பொதுவாக பாலிசி எடுப்பவர்கள் தங்களுக்கு தேவையானது எது என்பதை சரியாக தேர்வு செய்ய வேண்டும். மோசடி ஏஜென்ட்கள் சொல்வதை  கண்மூடித்தனமாக நம்பிக்கொண்டு கையெழுத்து போடுபவர்கள்தான் சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர்.  பாலிசி எடுக்கும்போது சம்பந்தப்பட்ட  நிறுவனங்கள் போன் அழைப்புகள் மூலம் வாடிக்கையாளர்களிடம் பேசி உறுதி செய்கின்றன. இந்த வழக்கமான நடைமுறை ஏஜென்ட்கள் அறிந்ததுதான்.  எனவே, நிறுவனத்தில் இருந்து போன் அழைப்பு வந்தால் விண்ணப்பத்தில் குறிப்பிட்டபடி அனைத்தையும் ஏற்றுக்கொண்டதாக கூறுமாறு  வாடிக்கையாளர்களை ஏஜென்ட்கள் நிர்பந்தித்து விடுகின்றனர்என காப்பீட்டாளர்களுக்கான செயல் கவுன்சில் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

 இதுகுறித்து காப்பீடு புகார்களை விசாரிக்கும் ஓம்பட்ஸ்மேன் மிலிந்த் காரத் கூறுகையில், கடந்த ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட சில விதிளின்படி,  காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் ஏஜென்ட்களுக்கு எதிரான உத்தரவு பிறப்பிக்க முடியும். அதேநேரத்தில், முறைகேடாக விற்பனை செய்யப்பட்ட  காப்பீடுகள் மீது ₹30 லட்சம் வரை இழப்பீடு வழங்க உத்தரவிட முடியும் என்றார். காப்பீடு தொடர்பான வழக்குகளுக்கு ஓம்பட்ஸ்மேனை  வாடிக்கையாளர்கள் நாடலாம். இதற்கு கட்டணம் எதுவும் கிடையாது. மோசடிகள் குறித்து வழக்கு பதிவு செய்ய கட்டணம், வழக்கறிஞர் கட்டணம்  கிடையாது. இமெயில் கூட புகார் அனுப்பலாம் என மிலிந்த் காரத் தெரிவித்தார்.

விதிகளை படிக்க முடியவில்லை

காப்பீடு நிறுவனங்கள் அளிக்கும் விண்ணப்பங்களில் விதிமுறைகள் மிகச்சிறிய எழுத்துக்களில் இருக்கும். இவற்றை படிப்பதே சிரமம். புரிந்து  கொள்வதும் கடினமாக இருக்கும். சில நோய்கள் காப்பீட்டில் வராது. சிலவற்றுக்கு முழுமையாக பலன் கோர முடியாது. இதெல்லாம் தெரியாமல்  ஏஜென்ட் நீட்டும் இடத்தில் அவர் மீதான நம்பிக்கையில் வாடிக்கையாளர்கள் கையெழுத்து போட்டு விடுகின்றனர். எனவே, விதிமுறைகளை  ஏஜென்ட்கள் ஒளிவு மறைவின்றி விளக்க வேண்டும்.

பிராந்திய மொழிகளிலும் அனைவருக்கும் புரியும் வகையில் விதிமுறைகள் குறிப்பிடப்பட வேண்டும். விண்ணப்பத்தை ெகாடுத்து வாடிக்கையாளர்கள்  முழுவதும் படித்து புரிந்த பிறகு அல்லது விளக்கம் கேட்டு தெளிவு பெற்ற பிறகே கையெழுத்து வாங்க வேண்டும். இல்லாவிட்டால் இத்தகைய  மோசடிகளும், பலன் கிடைக்காமல் ஏமாற்றம் அடைவரும் தொடரும் என வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: