அரசு ஊழியர்களை குறைக்க நடவடிக்கை தமிழகம் முழுவதும் நாளை அரசாணை எரிப்பு போராட்டம்: அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு

நெல்லை: தமிழகத்தில் செலவினங்களை குறைக்க அரசுத் துறைகள், ஆசிரியர்கள், உள்ளாட்சி துறைகளில் தேவையில்லாத பணியிடங்களை கண்டறியவும் அவுட்சோர்சிங் அல்லது ஒப்பந்தஅடிப்படையில் பணிகளை மேற்கொள்ளும் பணியிடங்களை கண்டறிந்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கவும் ஓய்வுப்பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆதிசேஷய்யா தலைமையில் பணியாளர் சீரமைப்புக் குழு அமைத்து கடந்த பிப்.19ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த குழுவுக்கு தமிழக நிதித்துறை செயலாளர் சித்திக் அலுவல் சாரா செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் அரசுத் துறைகளில் 30 முதல் 35 சதவீதம் பணியிடங்கள் காலியாக உள்ளன.

 இதனால் பணிச்சுமை அதிகரித்துள்ளது. எனவே காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என அரசு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்திவரும் நிலையில், பணியாளர்கள் எண்ணிக்கையை குறைக்கவும் அவுட்சோர்சிங் அடிப்படையில் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கவும் தமிழக அரசு அமைத்த குழுவிற்கு அரசு ஊழியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதை கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர். எனினும் தமிழக அரசு கண்டுகொள்வில்லை. தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ள நிலையில் அரசுத் துறைகளின் பணிகளை தனியார் வசம் ஒப்படைப்பதால் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற முடியாது. எனவே அரசுத் துறைகள், அரசு பள்ளிகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அரசு ஆணை எண்.56ஐ திரும்பப் பெற வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்கள் சார்பில் நாளை தமிழகம் முழுவதும் அரசு ஆணை எண்.56ஐ தீயிட்டு எரிக்கும் போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நெல்லை மாவட்ட செயலாளர் துரைசிங் கூறுகையில், ‘’தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து ஒரு கோடி பேர் வேலையின்றி உள்ளனர். அரசு பணியிடங்களை குறைக்கும் நோக்கத்தில் அரசு ஆணை 56 பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அரசு ஆணையை செயல்படுத்தும் விதமாக முதல் கட்டமாக கருவூலத் துறையில் அனைத்துப் பணிகளும் ஆன்லைன் மயமாக்கப்பட்டு தனியாரிடம் ஒப்படைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலை தொடர்ந்தால் பிற்காலத்தில் அரசுப் பணி என்பது கேள்விக்குறியாகி விடும். எனவே அரசுப் பணிகளை தனியாருக்கு தாரை வார்க்கும் அரசு ஆணை எண்.56ஐ எரிக்கும் போராட்டம் நாளை அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடத்தப்படுகிறது. இந்த ஆணையை திரும்பப் பெறும் வரை அரசு ஊழியர்களின் போராட்டம் தொடரும்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: