திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை எப்போது நடத்த உள்ளீர்கள்? உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி

மதுரை: திருவாரூர், திருப்பரங்குன்றத்திற்கு எப்போது இடைத்தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வியெழுப்பியுள்ளது. திமுக முன்னாள் தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் மறைவையொட்டி திருவாரூர் தொகுதியும், ஏ.கே.போஸ் மறைவையொட்டி திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியும் தற்போது காலியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இவ்விரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த உத்தரவிடக்கோரி சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், உயர்நீதிமன்ற உத்தரவு மற்றும் தேர்தல் விதிமுறைப்படி சட்டசபை தொகுதி காலியாக உள்ளது என அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தலை நடத்த வேண்டும்.

ஆனால், தமிழக தலைமை செயலாளர், கடந்த சில வாரங்களுக்கு முன்பு, தமிழகத்தில் பருவமழை அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இடைத்தேர்தலை தற்போது நடத்த சாத்தியமில்லாத சூழல் உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பினார். இந்த கடிதம் ஏற்புடையதல்ல. அதுமட்டுமல்லாது திருப்பரங்குன்றம் முன்னாள் எம்எல்ஏ போஸ் அவர்கள் வெற்றி பெற்றது செல்லாது என அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சரவணன் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் அவர் உயிரிழந்துவிட்டார். இருப்பினும் இதையும் தேர்தலை தள்ளிவைக்க ஒரு காரணமாக கருத இயலாது.

மேலும், 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தற்போது இந்த இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தலை நடத்தினால் அந்த முடிவுகள் அரசியல் கட்சிகளுக்கிடையே பெரும் மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்பதால் தமிழக அரசு இடைத்தேர்தல் நடத்த ஆர்வம் காட்டவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை எப்போது நடத்த உள்ளீர்கள்? தேர்தல் நடத்துவது ஏதேனும் கால அட்டவணை உள்ளதா? என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். இதுகுறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் இவ்வழக்கு விசாரணையை வருகிற 26ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: