கோவை வடகோவை மேம்பாலத்தில் நள்ளிரவில் தீப்பற்ற வைத்து ஆண் நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய இளம் பெண்

கோவை: கோவை வடகோவை மேம்பாலத்தில் நள்ளிரவில் பறக்கும் லாந்தர் எனப்படும் பாராசூட்டில் தீ பற்ற வைத்து ஆண் நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய இளம்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மேட்டுப்பாளையம் சாலையில் வடகோவை ரயில்நிலையம் அருகே வடகோவை மேம்பாலம் அமைந்துள்ளது. இந்த மேம்பாலத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 2 மணியளவில் ஒரு இளம் பெண் மற்றும் மூன்று இளைஞர்கள் நின்று கொண்டிருந்தனர். இவர்கள் பறக்கும் லாந்தர் எனப்படும் மெல்லிய கம்பி மற்றும் பாலீத்தின் பையால் ஆன பாராசூட் கீழ் பகுதியில் உள்ள திரியில் தீப்பற்ற வைத்து பாலத்தின் மேல் நின்று கொண்டு கீழே பறக்க விட்டனர்.

இந்த பறக்கும் லாந்தர் விளக்குகள் பாலத்தின் கீழ்புறம் உள்ள சாலைகளில் விழுந்து அணைந்தது. இளைஞர்களுடன் இளம்பெண் உற்சாகமாக லாந்தர்களை பறக்க விட்டுக் கொண்டிருந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு அவ்வழியாக சென்ற சில வாகன ஓட்டிகள் இளம் பெண் மற்றும் இளைஞர்களின் செயலை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவத்தை தங்களது செல்போன் மூலம் வீடியோ பதிவு எடுத்தனர். பின்னர், அவர்கள் சம்பந்தப்பட்ட இளம்பெண், இளைஞர்களிடம் விசாரித்தனர்.

இதற்கு அந்த இளம்பெண் மற்றும் இளைஞர்கள் சரிவர பதில் தெரிவிக்கவில்லை. அவர்கள் தயங்கி தயங்கி தெரிவித்த பதில்கள் மூலம் அந்த இளம் பெண் சென்னையை சேர்ந்தவர் என்றும், அவருக்கு பிறந்தநாள் என்பதால், கோவையில் உள்ள தன் நண்பர்களான மூன்று வாலிபர்களுடன் நள்ளிரவு மேம்பாலத்திற்கு வந்து தீ பற்ற வைத்து பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் என்பதும் தெரியவந்தது. மேலும், விசாரித்தவர்கள் செல்போன் மூலம் வீடியோ எடுக்கிறார்கள் என்பதை அறிந்தவுடன், இளம் பெண் மற்றும் அந்த மூன்று வாலிபர்களும் அங்கிருந்து சென்று விட்டனர். இது தொடர்பாக போலீசார் விசாரித்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: