காங்கிரஸ் தலைவர்கள் ராகுல், சோனியா மீதான வருமான வரித்துறை வழக்கு டிசம்பர் 4ல் இறுதி விவாதம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர்கள் ராகுல், சோனியா காந்தியின் வருமான வரி தொடர்பான மேல்முறையீட்டு மனு மீதான இறுதி வாதத்தை டிசம்பர் 4ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது. நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தி வந்த அசோசியேடட் ஜர்னல்ஸ் நிறுவனம், காங்கிரஸ் கட்சியிடம் ரூ.90.25 கோடி கடன் பெற்றிருந்தது. இதை காரணம் காட்டி, கடந்த 2010ல் தொடங்கப்பட்ட யங் இந்தியா நிறுவனம் அசோசியேடட் ஜர்னல்சை கையகப்படுத்தியது. யங் இந்தியா நிறுவனத்தில் பங்குதாரர்களாக காங்கிரஸ் தலைவர்கள் ராகுல், சோனியா ஆகியோர் உள்ளனர்.

இதன் மூலம் அசோசியேடட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2,000 கோடி மதிப்புள்ள சொத்துகளை யங் இந்தியா நிறுவனம் அபகரித்துவிட்டதாக டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனிடையே, இந்த பரிவர்த்தனைகளை அடிப்படையாக கொண்டு, ராகுல், சோனியா மற்றும் யங் இந்தியா நிறுவனத்தின் பங்குதாரரான மூத்த தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் உள்ளிட்டோர் மீது வருமான வரித்துறை விசாரணையை தொடங்கியது. கடந்த 2011-12ல் தாக்கல் செய்த வருமான வரி கணக்கை மறு ஆய்வு செய்வதாக ராகுல், சோனியா, பெர்னாண்டசுக்கு கடந்த மார்ச் மாதம் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதே போல வருமான வரித்துறையும், தங்களை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக்கூடாது என்று கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்தது.

இந்த மனுக்கள், நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, எஸ்.அப்துல் நஸீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. காங்கிரஸ் தலைவர்கள் சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர்களும், வக்கீல்களுமான ப.சிதம்பரம், கபில் சிபல், அரவிந்த் தாதர் ஆகியோர் ஆஜராகினர். வருமான வரித்துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். அப்போது நீதிபதிகள், ‘‘வருமான வரித்துறை ஏற்கனவே ஆஜராகி இருப்பதால் அவர்களுக்கு நோட்டீஸ் விடுக்க வேண்டிய அவசியமில்லை. வழக்கின் இறுதிவாதம் டிசம்பர் 4ம் தேதிக்குள் ஒத்திவைக்கப்படுகிறது’’ என உத்தரவிட்டனர்.

நில குத்தகை விவகாரம் அவசரமாக விசாரிக்க மறுப்பு

டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு பத்திரிகை கட்டிடத்துக்கான 56 ஆண்டு குத்தகை காலம் முடியவடைய உள்ளதால், நாளை நிலத்தின் உரிமையை அசோசியேடட் ஜர்னல்ஸ் நிறுவனம் திரும்ப ஒப்படைக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அசோசியேடட் ஜர்னல்ஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை, உடனடியாக விசாரிக்க கோரி நீதிபதி சுனில் கவுர் முன்பு நேற்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதி, பட்டியலிடப்பட்ட படி விசாரணை டிசம்பர் மாதம் மேற்கொள்ளப்படும் என கூறி மனுவை ஏற்க மறுத்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: