பெண்ணின் வயிற்றில் இருந்த 1.5 கிலோ இரும்பு பொருட்கள்

அகமதாபாத்: மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணின் வயிற்றில் இருந்து ஆணி, வளையல், மோதிரம் என 1.5 கிலோ எடையுள்ள பொருட்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் சீரடி பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதா(40). மனநிலை பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த இவர் நீதிமன்ற உத்தரவை அடுத்து கடந்த 31ம் தேதி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சங்கீதாவின் வயிறு அளவுக்கு அதிகமாக பெரிதாக காணப்பட்டதோடு,  தொடர்ந்து வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு எக்ஸ்ரே எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது வயிற்றில் குவியலாக உலோகப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் சுமார் இரண்டரை மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

இதில் சங்கீதாவின் வயிற்றில் இருந்து இரும்பு ஆணிகள், ஊசிகள், பிரேஸ்லெட், செயின், வளையல், செப்பு மோதிரம் என சுமார் ஒன்றரை கிலோ பொருட்கள் அகற்றப்பட்டது. சங்கீதா அக்யூபாகியா என்ற வினோத நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த நோய் பாதித்தவர்கள் கூர்மையான பொருட்களை விழுங்கி விடுவார்கள் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். குறிப்பாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களில் தான் இதுபோன்றோர் இருப்பார்கள் என்றும் தெரிவித்தனர். சமூக சேவகர் அர்பன் நாயக் கூறுகையில், “சங்கீதா மருத்துவமனையில் இருந்து திரும்பியவுடன் கண்காணிப்பில் வைக்கப்படுவார்” என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: