மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம் நிர்மலாதேவி மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளதால் வழக்குப்பதிவு

* திருவில்லிபுத்தூர் கோர்ட்டில் அரசு வக்கீல் வாதம்

விருதுநகர்: கல்லூரி மாணவிகளை பாலியலுக்கு அழைத்த வழக்கில், நிர்மலாதேவி உள்ளிட்ட மூவர் மீதும் முகாந்திரம் இருப்பதால் வழக்கு பதியப்பட்டுள்ளதாக திருவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் அரசு வக்கீல் வாதிட்டார். கல்லூரி மாணவிகளை பாலியலுக்கு அழைத்த வழக்கில் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பான வழக்கில் திருவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றத்தில் மூவரும் ஆஜராகி வருகின்றனர். மகிளா நீதிமன்ற நீதிபதி லியாகத் அலி, மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் நேற்று பொறுப்பு நீதிபதியாக இருந்ததால் நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் அங்கு ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, ‘எங்கள் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை முகாந்திரம் இல்லாததால், எங்களை வழக்கில் இருந்து விடுவிக்கவேண்டும்’ என மூவரும் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்கள் மீது விசாரணை நடைபெற்றது.

இதற்கு அரசு வக்கீல், ‘‘நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய முகாந்திரம் உள்ளது. அவர்கள் தரப்பு கோரிக்கைக்கு பதிலளிக்க எங்களுக்கு ஒரு வாரம் அவகாசம் வேண்டும்’’ என வாதிட்டார். இதற்கு நீதிபதி லியாகத் அலி, ‘ஒரு வாரம் அவகாசம் வழங்க முடியாது’ என கூறி விசாரணையை 15ம் தேதிக்கு (நாளை) ஒத்திவைத்தார். மனித உரிமை கமிஷனில் புகார்: இதற்கிடையில் பேராசிரியர் முருகனை விடுவிக்ககோரி, அவரது மனைவி சுஜா தேசிய மனித உரிமை ஆணையத்தில் மனு செய்துள்ளார். மனுவில், ‘‘ எனது கணவர் முருகனை பொய்யான சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் மூலமாக கைது செய்து, மதுரை மத்திய சிறையில் ஆறு மாதத்திற்கு மேலாக அடைத்து வைத்துள்ளனர். இதுவரை ஜாமீன் வழங்க மறுக்கும் நீதிமன்றத்தில் செயல் மனித உரிமை மீறலாக உள்ளது’’ என தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: