அதிமுக தலைமை அலுவலகத்தில் பழைய சிலை அகற்றம் ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறக்கப்படுகிறது. அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மரணம் அடைந்தார். இதையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கல சிலை அவரது 70வது பிறந்தநாளான கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இந்த சிலையை முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர். சிலையை வடிவமைத்த சிற்பிக்கு மோதிரமும் பரிசளிக்கப்பட்டது. அதிமுக அலுவலகத்தில் எம்ஜிஆர் சிலை அருகே ஜெயலலிதாவின் சிலை வைக்கப்பட்டிருந்தது. ஆனால், சிலையின் வடிவத்தில் கொஞ்சமும் ஜெயலலிதா உருவம் இல்லை என்று சமூக வலைதளங்களில் செய்தி வெளிவந்தது.

ஜெயலலிதாவுக்கு சிலை வைத்தது குறித்து விமர்சனங்கள் வந்துள்ளது பற்றி முதல்வர் மற்றும் அமைச்சர்களிடம் கேட்டபோதும், “தற்போது ஜெயலலிதாவுக்கு வைக்கப்பட்ட சிலைக்கு பதில் புதிய சிலை வைக்கப்படும்” என்று கூறி வந்தனர். இந்நிலையில், ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று காலை 9.30 மணிக்கு திறந்து வைக்கப்படுகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து ஜெயலலிதாவின் புதிய சிலையை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள். விழாவில் அமைச்சர்கள், அதிமுக தலைமை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள். ஜெயலலிதாவின் புதிய சிலையை ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சிற்பி ராஜ்குமார் வடிவமைத்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: