மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமார் உடல் தகனம்: முழு அரசு மரியாதையுடன் நடந்தது

பெங்களூரு: உடல் நலக்குறைவால் காலமான மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் உடல்  நேற்று முழு அரசு மரியாதையுடன் பெங்களூருவில் தகனம் செய்யப்பட்டது. இறுதி  அஞ்சலியில் எல்.கே.அத்வானி, அமித்ஷா மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள்  கலந்துகொண்டனர். கர்நாடக மாநில பாஜவின் மூத்த தலைவர்களில்  ஒருவரும், மத்திய உரம் மற்றும் ரசாயனத் துறை அமைச்சருமான  எச்.என்.அனந்த்குமார் (59) புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்றும் பலனின்றி நேற்று முன்தினம் அதிகாலை 3.30 மணியளவில்  பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவரது உடல்  பசவனகுடியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக  வைக்கப்பட்டது. பிரதமர் நரேந்திரமோடி, கர்நாடக மாநில ஆளுநர்  வி.ஆர்.வாலா, முதல்வர் குமாரசாமி, முன்னாள்  முதல்வர்கள் எடியூரப்பா, ஜெகதீஷ்ஷெட்டர், எஸ்.எம்.கிருஷ்ணா,  எம்.வீரப்பமொய்லி, சித்தராமையா, மத்திய அமைச்சர்கள் டி.வி.சதானந்தகவுடா,  ரமேஷ் ஜிகஜிணகி, அனந்த்குமார் ஹெக்டே, உள்ளிட்ேடார் அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து, பசவனகுடியில்  உள்ள வீட்டில் இருந்து ராணுவ வாகனத்தில் பெங்களூரு மல்லேஷ்வரத்தில் உள்ள  மாநில பாஜ தலைமை அலுவலகத்திற்கு உடல் நேற்று காலை 7 மணிக்கு கொண்டு  வரப்பட்டது. 2 மணி நேரம் அலுவலகத்தில் வைக்கப்பட்டது. கட்சி தலைவர்கள், 104  எம்எல்ஏகள், எம்எல்சிகள், எம்பிகள், மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர்  கண்ணீரஞ்சலி செலுத்தினர். அதை தொடர்ந்து அவர் மிகவும் நேசித்த பசவனகுடி  நேஷனல் கல்லூரி மைதானத்திற்கு 9.30 மணிக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள்  அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அவரது உடலுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ஆளுநர் வி.ஆர்.வாலா, தமிழக பாஜ தலைவர் தமிழிசை,  இல.கணேசன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மற்றும்  பொதுமக்கள் நீண்ட வரிசையில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

அவரது உடல்  பகல்  12.30  மணிக்கு அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் ஊர்வலமாக முக்கிய  சாலைகள் வழியாக சாம்ராஜ்பேட்டை மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அனந்த்குமாரின் மனைவி தேஜேஷ்வினி,  மகள்கள் ஐஸ்வர்யா, விஜயேதா, அனந்த்குமாரின் மூத்த சகோதரர் நந்தகுமார்  ஆகியோர் அஞ்சலி செலுத்திய பின்னர் ராணுவ வீரர்கள் அணி வகுப்பு நடத்தி  இறுதி மரியாதை செய்தனர். அவர் உடல் மீது போர்த்தி இருந்த தேசியகொடி  எடுக்கப்பட்ட பின் துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன்  பகல் 2.46 மணிக்கு தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு நந்தகுமார் தீ  மூட்டினார்.

அமைச்சரவை இரங்கல்

டெல்லியில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் அனந்த்குமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் அனந்த்குமார் மறைவிற்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூடுதல் பொறுப்பு

அனந்த்குமார் உடல்நலக்குறைவால் காலமானதை தொடர்ந்து, அவர் வகித்து வந்த பொறுப்புகள், மத்திய அமைச்சர்கள் நரேந்திரசிங் தோமர் மற்றும் சதானந்த கவுடாவுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக நரேந்திரசிங் தோமரும், உரங்கள் மற்றும் ரசாயனத்துறை அமைச்சராக சதானந்த கவுடாவும் கூடுதல் பொறுப்பு வகிப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: