மனோஜ் பிரசாத் ஜாமீன் மனு தள்ளுபடி

புதுடெல்லி: சிபிஐ இயக்குனர் ராகேஷ் அஸ்தானா வழக்கில் லஞ்சம் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட இடைத்தரகர் மனோஜ் பிரசாத்தின் ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி தொடர்புடைய வழக்கில் ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் சதீஷ் சனாவை விடுவிக்க லஞ்சம் பெற்றதாக சிபிஐ சிறப்பு இயக்குனர்  ராகேஷ் அஸ்தானா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்டதாக  துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் மனோஜ் பிரசாத் கடந்த மாதம் 17ம் தேதி  கைது செய்யப்பட்டார்.

தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி கடந்த 3ம் தேதி விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் மீண்டும் ஜாமீன் கோரி மனோஜ் பிரசாத் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். நீதிபதி நஜ்மி வசிரி முன்னிலையில் நேற்று மனு விசாரணைக்கு வந்தது. மனோஜ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா, ‘‘மனோஜ் பிரசாத் ஏறத்தாழ ஒரு மாதமாக காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஆனால் அவரிடம் ஒரு முறை கூட விசாரணை நடத்தப்படவில்லை. அவரை ஜாமீனில் விடுவிக்க வேண்டும்” என்றார். சிபிஐ தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் விக்ரம்ஜித் பானர்ஜி மற்றும்  வழக்கறிஞர் ராஜ்திபா பெகுரா ஆகியோர் தங்களது வாதத்தில், ‘‘விசாரணை முக்கிய கட்டத்தில் உள்ளது. மற்ற வழக்குகளை காட்டிலும் மனோஜ் வழக்கு வேறுப்பட்டது. எனவே ஜாமீன் தரக்கூடாது’’ என்றனர். இதனையடுத்து நீதிபதி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: