டிவிட்டரில் ராகுல் சாடல் ரபேல் ஒப்பந்தத்தில் தனது திருட்டை ஒப்புக்கொண்டுள்ளார் பிரதமர் மோடி

புதுடெல்லி: ‘‘உச்ச நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தின் மூலம், ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் தனது திருட்டை பிரதமர் மோடி ஒப்புக் கொண்டுள்ளார்’’ என டிவிட்டரில் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளா். ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான அறிக்கையை மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்தது. மேலும், விலை தொடர்பான விவரங்களையும் சீலிடப்பட்ட உறையில் வைத்து பிரமாண பத்திரத்தை சமர்ப்பித்துள்ளது. 2013ல் கடந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நடைமுறையை பின்பற்றியே இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும், விலை பேரத்தை முந்தைய அரசு விரைவில் இறுதி செய்யத் தவறியதால்தான், கூடுதல் விலைக்கு விமானத்தை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தனது 14 பக்க அறிக்கையில் மத்திய அரசு கூறி உள்ளது.

ஏற்கனவே, ரபேல் விவகாரத்தில் பெருமளவு ஊழல் நடந்திருப்பதாக குற்றம்சாட்டி வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசின் அறிக்கை குறித்து தனது டிவிட்டரில் இந்தியில் வெளியிட்ட நேற்றைய பதிவில், ‘‘உச்ச நீதிமன்றத்தில் மோடி தனது திருட்டை ஒப்புக் கொண்டுள்ளார். விமானப் படையிடம் கேட்காமலேயே ஒப்பந்தத்தில் மாற்றம் செய்து, ரூ.30,000 கோடியை அம்பானி பாக்கெட்டில் போட்டுள்ளார். இந்தப் படம் இன்னும் வெளிவரும் நண்பரே’’ என குறிப்பிட்டுள்ளார். ரபேல் தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வர உள்ளது.

ஏழைகளின் பணத்தை பறித்தார்

சட்டீஸ்கரின் மகாசமுந்த் பகுதியில் நேற்று தேர்தல் பிரசாரத்தில் பேசிய ராகுல் காந்தி, ‘‘பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் தலையணைக்கு கீழ் ஒளித்து வைக்கப்பட்டிருந்த பணம் வெளியே வந்ததாக மோடி கூறுகிறார். சரிதான். ஆனால் அப்படி பறிக்கப்பட்ட பணம் யாருடையது என்பதை அவர் கூறவில்லை. பணத்தை மாற்ற ஏழைகள்தான் வரிசையில் நின்றார்கள். சூட்-பூட் போட்ட பணக்காரர்கள் யாரும் வரிசையில் நிற்கவில்லையே? பணக்காரர்களின் கருப்பு பணத்தை வெள்ளையாக்க பிரதமர் மோடி உதவியிருக்கிறார். ஏழைகளின் பணத்தை பறித்து, பணக்காரர்களுக்கு பலனை தந்துள்ளார்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: