சபரிமலை சீசன் தொடங்குகிறது ஈரோடு ஜவுளி சந்தையில் வேட்டி, துண்டு விற்பனை சூடுபிடித்தது

ஈரோடு: சபரிமலை சீசன் தொடங்க உள்ளதையடுத்து ஈரோடு ஜவுளி சந்தையில் ஐயப்ப  பக்தர்கள் வேட்டி, துண்டுகள் விற்பனை தொடங்கி உள்ளதாக வியாபாரிகள்  தெரிவித்துள்ளனர். தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 4 வாரங்களாக ஈரோடு  ஜவுளி சந்தையில் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்து வந்தது. கடைசி ஒரு  வாரகாலத்தில் விற்பனை இருமடங்காக நடைபெற்றதோடு தீபாவளிக்காக கொள்முதல்  செய்யப்பட்டிருந்த ஜவுளிகளில் 80 சதவீதம் வரை விற்று தீர்ந்துள்ளதால்  வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில், நேற்று நடைபெற்ற  ஜவுளி சந்தையில் கூட்டம் மிகவும் குறைவாக இருந்த போதிலும் சபரிமலை சீசன்  விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கார்த்திகை முதல் தேதி  ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவிப்பது வழக்கமாகும். இன்னும் 3 நாளே உள்ள  நிலையில் ஈரோடு ஜவுளி சந்தையில் ஐயப்ப பக்தர்கள் அணியும் வேட்டிகள்,  துண்டுகள், இருமுடி பைகள் ஆகியவை விற்பனை அதிக அளவில் நடைபெற்றதாக  வியாபாரிகள் கூறினர்.

 இது குறித்து வியாபாரிகள் தரப்பில் கூறுகையில்,  தீபாவளி விற்பனை முடிவடைந்த நிலையில் இந்தவாரம் சபரி மலை சீசன் விற்பனை  தொடங்கி உள்ளது. ஐயப்ப பக்தர்கள் வேட்டி ரூ.140 முதல் ரூ.240 வரையிலும்,  துண்டுகள் ரூ.20 முதல் ரூ.40 வரையிலும் விற்பனைக்கு உள்ளது. நூல் விலை  உயர்வு, போக்குவரத்து செலவு உள்ளிட்ட காரணங்களால் கடந்தாண்டை காட்டிலும் 5  சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது. கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட  மாநிலங்களை சேர்ந்த மொத்த வியாபாரிகள் மற்றும் தமிழகத்தை சேர்ந்த சிறு  வியாபாரிகள் ஐயப்ப பக்தர்கள் அணியும் வேட்டி, துண்டுகளை கொள்முதல்  செய்துள்ளனர். அடுத்த வாரம் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்று  எதிர்பார்க்கிறோம் என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: