மனநலம் பாதித்த கைதிகளுக்கு சிகிச்சை: சுகாதாரத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

ெசன்னை: சிறைகளில் உள்ள மனநலம் பாதிப்பு உள்ளிட்ட நோய்வாய்ப்பட்ட கைதிகளுக்கு சிகிச்சை வழங்குவது குறித்து பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறைகளில் கைதிகள் மரணமடைவது தொடர்பாக தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு, மாநில அரசுகளுக்கு தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம், தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு சிறையில் கைதிகள் மரணம் குறித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அரசுத்தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அரசின் அறிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், சிறைகளில் நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி நீதிமன்றத்துக்கு உதவியாக மூத்த வக்கீல் வைகையை நியமித்து உத்தரவிட்டனர்.

 இந்த உத்தரவின் அடிப்படையில் மூத்த வழக்கறிஞர் வைகை, வேலூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட சிறைகளில் ஆய்வு நடத்தி ஆரம்பகட்ட அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றம் நியமித்த மூத்த வக்கீல் வைகை தன் வாதங்களை முன்ைவத்தார்.  இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், அரசு பிளீடரை பார்த்து, என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்று கேட்டனர். அதற்கு அரசுத் தரப்பில், தண்ணீர் வசதி, கழிவுநீர் அகற்றுதல் வசதி, பெண்களுக்கு தேவையான வசதிகள் தரப்பட்டுள்ளன. படிப்படியாக மற்ற வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள், நாங்கள் அரசு நிர்வாகத்தை நடத்த முடியுமா? என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த வழக்கு நடத்தப்படுகிறது. சிறைகளில் அரசு உரிய வசதிகளைச் செய்து தரவில்லை என்றால் சம்பந்தப்பட்ட துறை செயலாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக நேரிடும். இந்த வழக்கில் சுகாதாரத்துறை செயலாளரை சேர்க்க இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது. தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள மனநலம் பாதிக்கப்பட்ட கைதிகளுக்கும், நோயால் பாதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கும் உரிய சிகிச்சை வழங்குவது குறித்து சுகாதாரத்துறை பரிசீலிக்க வேண்டும். இது தொடர்பாக வரும் டிசம்பர் 13ம் தேதி தமிழக அரசு விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: