ரயில்வே போலீசாரும், ரயில்வே பாதுகாப்பு படையினரும் ‘ஆப்சென்ட்’ தரமணி பறக்கும் ரயில் நிலையத்தில் பெண்களிடம் வாலிபர்கள் சில்மிஷம்

சென்னை: தரமணி பறக்கும் ரயில் நிலையத்திற்கு இரவு நேரங்களில் வரும் பெண்களிடம் சில வாலிபர்கள் சில்மிஷத்தில் ஈடுபடுவதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீசார் பாதுகாப்பை உறுதி செய்வதில் மெத்தனமாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து மயிலாப்பூர், திருவான்மியூர், தரமணி, பெருங்குடி வழியாக வேளச்சேரிக்கு தினமும் பறக்கும் ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயிகளில் பள்ளி, கல்லூரி மற்றும் ஐடி நிறுவனங்களுக்கு செல்பவர்கள் என தினமும் பல்லாயிரக்கணக்கானோர் பயணம் செய்கின்றனர். தரமணி மற்றும் திருவான்மியூரில் உள்ள 200க்கும் மேற்பட்ட ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் பறக்கும் ரயில்களை நம்பி தான் பணிக்கு வருகிறார்கள். குறிப்பாக, தரமணி ரயில் நிலையத்தில் இருந்து பஸ் நிலையமோ அல்லது ஐடி நிறுவனங்களுக்கோ செல்ல போக்குவரத்து வசதி இல்லை. அதனால் தரமணி ரயில் நிலையம் வரும் பெண்கள் அங்கிருந்து வாடகை கார், ஆட்டோக்களில்தான் அலுவலகத்திற்கு செல்கின்றனர். பெரும்பாலானவர்கள் நடந்தே அலுவலகத்திற்கு செல்கின்றனர். இந்த பகுதி ஆள்நடமாட்டம் இல்லாமல் உள்ளது.

வார நாட்களில் ரயில்கள் மக்கள் கூட்டம் மற்றும் ஆள்நடமாட்டம் அதிகம் இருப்பதால் பயமின்றி அலுவலகத்துக்கு சென்று வருகின்றனர். ஆனால் விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தரமணி ரயில் நிலையத்தில் ஆள்நடமாட்டம் மிக குறைவாகவே உள்ளது. மேலும், தரமணி ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்டர் பாதுகாப்பு இல்லாமல் பாதாள சுரங்கப்பாதையில் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தின் உள் பகுதியிலும் போதிய பாதுகாப்பு வசதி இல்லாமல் இருட்டாக உள்ளது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, தரமணி ரயில் நிலைய வளாகத்தில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்களில் இரவு 7 மணிக்கு மேல் அங்கு சுற்றும் வாலிபர்கள் தனியாக ரயில் நிலையத்திற்கு வரும் பெண்களை பின் தொடர்ந்து வந்து கிண்டல் செய்வது, கையை பிடித்து இழுப்பது, கைப்பையை பறிக்க முயற்சி செய்வது, பணம், செல்போனை பறிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதுபற்றி பொதுமக்கள் புகார் செய்ய சென்றால், ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசாரும் இருப்பது இல்லை, ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் இருப்பது இல்லை. ரயில் நிலையத்துக்கு வெளியில் உள்ள சாலையில் மட்டும் ரோந்து போலீசார் உள்ளனர். அவ்வளவு தூரம் நடந்து வந்து ரோந்து போலீசாரிடம் புகார் தெரிவிக்க பெண்கள் பயப்படுகிறார்கள். எனவே, அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறும் முன்பே, போலீஸ் அதிகாரிகள் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவு நேரங்களில் தரை பகுதி, டிக்கெட் கவுன்டர் இருக்கும் பகுதி மற்றும் ரயில் வந்து செல்லும் நடைபாதைகளில் கூடுதல் போலீசாரை பாதுகாப்புக்கு நிறுத்த வேண்டும் என்று பெண் பயணிகள் எதிர்பார்க்கிறார்கள். அப்போதுதான் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்களை தடுக்க முடியும். மேலும், ரயில் நிலையங்களில் பகல் மற்றும் இரவு நேரங்களில் தேவையில்லாமல் நடமாடும் நபர்களை போலீசார் அப்புறப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: