சந்திரபாபு நாயுடுவை தொடர்ந்து மு.க.ஸ்டாலினுடன் சீதாரம் யெச்சூரி சந்திப்பு: மதச்சார்பற்ற கட்சிகள் ஓரணியில் திரண்டு பாஜகவை வீழ்த்துவோம் என பேட்டி

சென்னை: சந்திரபாபு நாயுடுவை தொடர்ந்து, ஸ்டாலினை மார்க்சிஸ்ட் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி நேற்று சந்தித்துப் பேசினார். பின்னர், அவர் கருத்து வேறுபாடுகளை மறந்து மதசார்பற்ற கட்சிகள் ஓரணியில்  திரண்டு பாஜவை வீழ்த்துவோம் என்றார்.  நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தேசிய அளவில் அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. அதே நேரம் பாஜவை வீழ்த்துவதற்காக ஒத்த கருத்துள்ள மதசார்பற்ற கட்சிகள் ஒரணியில் திரண்டு வலுவான மெகா கூட்டணியை  அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. இதில் திமுக முக்கிய பங்காற்றுகிறது. அதன் தொடர்ச்சியாக ராகுல்காந்தியை சந்திரபாபு நாயுடு சந்தித்த பின்னர், சீதாராம் யெச்சூரி, தேவ கவுடா, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சி தலைவர்களை நேரில் சந்தித்தார்.  இந்நிலையில், மார்க்சிஸ்ட் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி நேற்று சென்னை வந்தார். அவர் தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் தலைமை அலுவலகத்தில் நடந்த மாநில குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்.  இக்கூட்டத்தில், திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் பாஜவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது, நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது  மற்றும் தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

  இதை தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்துக்கு மார்க்சிஸ்ட் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி நேற்று மாலை 5 மணிக்கு வந்தார். அவரை மு.க.ஸ்டாலின்  வரவேற்றார். இருவரும் தேசிய அளவில் வலுவான மதசார்பற்ற அணி அமைப்பது தொடர்பாக பேசினர். அவருக்கு மு.க.ஸ்டாலின் தேநீர் விருந்து அளித்தார். அப்போது, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி எழுதிய தாய்  காவியத்தை சீதாராம் யெச்சூரிக்கு அளித்தார்.  இந்த சந்திப்பின் போது, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், டி.ஆர்.பாலு, கனிமொழி எம்பி உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் இருந்தனர்.  பின்னர் இந்த சந்திப்பு குறித்து சீதாராம் யெச்சூரி நிருபர்களிடம் கூறியதாவது: எங்கள் சந்திப்பு மிகவும் நல்ல முறையில் நடந்தது. இந்தியாவை காப்பதுதான் எங்கள் சந்திப்பின் நோக்கம். மதசார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து இந்தியாவின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பது  முக்கிய கடமை. அந்த அடிப்படையில் நாங்கள் ஓரணியில் திரண்டுள்ளோம்.  பாஜ ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பில்லை. அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவேதான் மதர்சார்பற்ற கட்சிகள் இன்று நாட்டை காக்க முன்வந்துள்ளன. தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் 20 தொகுதி  இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் போட்டியிடுமா என்பது பற்றி கட்சியின் மாநில குழு பேசி முடிவு செய்யும். முதல்கட்டமாக நாங்கள் மாநில அளவில் வலுவான கூட்டணியை உருவாக்கி வருகிறோம்.

 அடுத்தகட்டமாக தேசிய அளவில் வலுவான அணியை அமைப்போம். இந்தியாவை பாதுகாக்க எல்லோரும் ஓரணியில் திரண்டு நிற்போம். பாஜவை ரஜினிகாந்த் பலம் வாய்ந்த கட்சி என்று கூறியிருக்கிறாரே என்று கேட்கிறீர்கள்.  அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நான் அவரது ரசிகரும் கூட. அவர் கூறியதை வைத்து நான் எதுவும் சொல்ல முடியாது.  வாஜ்பாய் வலிமையான தலைவர் என்றார்கள். ஆனால் பாஜ தோற்கடிக்கப்பட்டது. அதேபோல் நேருவை குறிப்பிட்டார்கள். காங்கிரசும் தோற்கடிக்கப்பட்டது. எனக்கும், ஸ்டாலின் போன்றவர்களுக்கும் ஜனநாயகத்தின் மீது மிகுந்த  நம்பிக்கை உள்ளது. பாஜவை தோற்கடித்து ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும்.   ராகுல்காந்தியை பிரதமராக ஏற்றுக்கொள்வீர்களா? என்றால், இந்தியா ஒரு ஜனநாயக நாடு. அதிபர் ஆட்சி முறை கொண்ட நாடல்ல. இங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஒன்று கூடி பிரதமரை தேர்வு செய்வார்கள்.  இதுதான் நடைமுறை. இந்த அணியில் உள்ள கட்சிகளுக்கு இடையே நிறைய கருத்து வேறுபாடுகள் இருக்கிறது என்கிறீர்கள். கருத்து வேறுபாடுகளை மறந்து நாட்டை காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வில் நாங்கள்  ஒன்றிணைந்து செயல்படுவோம்.  இவ்வாறு அவர் கூறினார்.

வருமான வரித்துறை அதிகாரிகள் சந்திப்பு

வருமான வரித்துறை ஊழியர் சங்கம் மற்றும் அதிகாரிகள் சங்கம் இணைந்த கூட்டு இயக்க நிர்வாகிகள் எம்.எஸ்.வெங்கடேசன், ஏ.இளங்கோ ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்க தலைமை நிர்வாகிகள் பி.மீராபாய், எஸ்.சுந்தரமூர்த்தி,  எம்.வீரபாகு, பி.கே.சுபாஷினி, ஏ.பி.பாலாஜி, கே.தனசேகர், ஏ.மஞ்சுளா ஆகியோர் நேற்று அண்ணா அறிவாலயம் வந்தனர். திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.  மத்திய அரசுப் பணிகளில் தமிழக இளைஞர்களுக்கு உரிய வாய்ப்பு அளிக்க ஆவன செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். அப்போது தி.மு.க. அறக்கட்டளை தணிக்கையாளர் ஏ.கனகராஜ் உடனிருந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: