கலிஃபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத் தீ: பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு

கலிஃபோர்னியா: அமெரிக்க நாட்டின் கலிஃபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 42-ஆக உயர்ந்துள்ளது. கலிஃபோர்னியாவின் வரலாற்றிலேயே மிக மோசமான காட்டுத்தீயாக கருதப்படும் 1933-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்சிலுள்ள கிரிஃபித் பூங்காவில் ஏற்பட்ட காட்டுத்தீயின் அளவிற்கு சமமான நிலையை இது அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கலிஃபோர்னியாவின் வடக்கே பியூட் கவுண்ட்டி மற்றும் பாரடைஸ் ஆகிய நகரங்களில் காட்டுத் தீ ஏற்பட்டது. இதேபோல் தெற்கே லாஸ் ஏஞ்சலீஸ் கவுண்ட்டியிலும் காட்டுத் தீ ஏற்பட்டது. கலிஃபோர்னியாவின் மூன்று மூலைகளிலும் ஏற்பட்ட காட்டுத்தீயிலிருந்து தப்பிக்க கிட்டதட்ட இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

தீயை முழுவதுமாக கட்டுப்படுத்தும் பணிகளில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். காட்டுத்தீயில் சிக்கி கிட்டத்தட்ட 7 ஆயிரம் கட்டிடங்கள் முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளன. காட்டுத் தீ ஏற்பட்ட பகுதியில் தீயில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், மேலும் 200 பேர் வரை மாயமாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கலிஃபோர்னியாவில் வரும் நாட்களில் காற்று இன்னும் அதிகப்படியாக வீசக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், நிலைமை மேலும் மோசமடைய வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: