காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் அண்ணாவின் நாடகம் நீக்கம்: தலைவர்கள் கடும் கண்டனம்

காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளின் பாடத் திட்டத்தில் இருந்து அண்ணா எழுதிய நாடகம் நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 40க்கும் மேற்பட்ட இணைப்புக்கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரி மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை உருவாக்க பாடத்திட்டக்குழு உள்ளது. இதன்படி பிஏ இளங்கலையில் தமிழ் பகுதி - 1ல், ‘பண்டைய இலக்கியங்களில் நாடகம்’ என்ற பிரிவில் அறிஞர் அண்ணா எழுதிய ‘நீதிதேவன் மயக்கம்’ நாடகம் ஒரு பாடமாக இருந்தது. இந்நிலையில், பல்கலைக்கழக கல்லூரி வளர்ச்சிக்குழும டீன் ராஜமோகன் அனைத்து இணைப்பு கல்லூரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், ‘நீதிதேவன் மயக்கம்’ நாடகத்தை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக அரு.ராமநாதன் எழுதிய ‘ராஜராஜசோழன்’ நாடகம் சேர்க்கப்பட வேண்டும் என கூறியுள்ளார். இது புது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திமுக முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் எம்எல்ஏ கூறுகையில், ‘‘தமிழ் மொழி வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டவர் அண்ணா. அவரது நாடகத்தை நீக்குவது கண்டனத்துக்குரியது.  பாஜவின் தூண்டுதலில் இதுபோன்று மாற்றப்பட்டுள்ளதா என சந்தேகம் எழுந்துள்ளது. மீண்டும் அந்த பாடத்திட்டம் சேர்க்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் பல்கலைக்கழகம் முன்பு மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்,’’ என்றார்.

திமுக இலக்கிய அணி தலைவர் தென்னவன் கூறுகையில், ‘‘மதவெறி பிடித்த பாஜவுக்கு எடப்பாடி அரசு உடந்தையாக உள்ளது என்பதற்கு, கல்லூரி பாடத்தில் அண்ணாவின் ‘நீதிதேவன் மயக்கம்’  நீக்கப்படவேண்டும் என்ற அறிவிப்ேப சாட்சி. மத்திய, மாநில அரசுகள் மதவெறியை பரப்பும் பீடமாக பல்கலைக்கழகத்தை மாற்றும் முயற்சி கண்டிக்கத்தக்கது,’’ என்றார்.

‘பழைய பாடத்திட்டம் தொடரும்’

பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரனிடம் கேட்டபோது, ‘‘பிஏ இளங்கலை தமிழ் பாடத்தில் அண்ணாவின் நாடகம் இடம் பெற்றுள்ளது. இது பாடத்திட்டக்குழு பரிந்துரைத்து, அதற்கு மேலே உள்ள அகாடமிக் கவுன்சிலால் ஏற்றுக்கொள்ளப்பட்டு சிண்டிகேட் ஒப்புதலோடு நடைமுறைக்கு வந்துள்ளது. இது தொடரும். அண்ணாவின் எழுத்துக்கள் எந்த வடிவத்திலாவது இடம் பெறும். இணைப்பு கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை திரும்ப பெறப்பட்டு, பழைய பாடத்திட்டம் தொடரும் என்ற சுற்றறிக்கை அனுப்பப்படும். இந்த சுற்றறிக்கை தொடர்பாக உரிய விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்..

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: