திசைமாறியது கஜா புயல் கடலூர்-பாம்பன் இடையே கடக்கிறது: நாளை முதல் கனமழைக்கு வாய்ப்பு; 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

சென்னை: கஜா புயலின் திசை மாறியது. கடலூர்-பாம்பன் இடையே நாளை மறுநாள் (15ம் தேதி) கரையை கடக்கிறது. அப்போது, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டம் மற்றும் காரைக்காலில் கனமழை பெய்யக்கூடும். 100 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த 10ம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு ‘’கஜா’’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலானது நேற்று முன்தினம் சென்னைக்கு வடகிழக்கே 840 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. தற்போது நாகப்பட்டினத்திற்கு வட கிழக்கே 820 கிலோ மீட்டர் தொலையில் நிலைகொண்டுள்ளது. இந்த புயல் 15ம் தேதி முற்பகலில் கடலூர் - பாம்பன் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மிகவும் பலத்த மழை பெய்யக்கூடும். 100 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் அளித்த பேட்டி: தென் கிழக்கு வங்க கடலில் உருவான ‘’கஜா’’ புயல் நாகப்பட்டினத்திற்கு வட கிழக்கே சுமார் 820 கிலோ மீட்டர் தொலைவில் தற்போது நிலைக்கொண்டுள்ளது. இந்த புயல் 15ம்தேதி முற்பகலில் கடலூர், பாம்பன் இடையே கரையை கடக்கும். தற்போதைய நிலவரப்படி 14ம் தேதி (நாளை) இரவு முதல், 15ம் தேதி புயல் கரையை கடக்கும் வரையில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் பலத்த காற்று வீசும். மணிக்கு 80 கிலோ மீட்டர் முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த காற்று வீசக்கூடும். சில சமயங்களில் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும். புயல் கரையை கடக்கும் நேரத்தில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். எனவே, 15ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு இருக்கிறோம். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மிக பலத்த மழை பெய்யக்கூடும். நாகப்பட்டினம், கடலூர், காரைக்காலில் இயல்பை விட ஒரு மீட்டர் அளவுக்கு கடல் நீர் மட்டம் உயரும்.

 சென்னையை பொறுத்தவரையில் மழை பெய்யக்கூடும். புயல் பாதிப்பு இல்லை. இயல்பான அளவில் காற்று வீசக்கூடும். பொதுவாக கனமழைக்கான அறிவிப்பை ரெட் அலர்ட்டாக குறிப்பிட்டு இருக்கிறோம். இது எங்களின் நிர்வாக நடவடிக்கைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. பொது மக்களுக்கானது அல்ல. எனவே மக்கள் பீதி அடைய வேண்டியது இல்லை. இது குறித்த விளக்கத்தை எங்களது இணையதளத்தில் வெளியிட்டு உள்ளோம். 20 சென்டி மீட்டர் அளவுக்கு மழை பொழியுமா என்று கேட்கிறார்கள். புயல் கடக்கும் நேரத்தில் ஈரப்பதத்தை பொறுத்து மழையின் அளவு வேறுபடும். புயல் கரையை கடக்கும் போது மீண்டும் புயலாக மாறும் வாய்ப்பு இருக்கிறது.

இவ்வாறு பாலச்சந்திரன் கூறினார். முதல்வர் அவசர ஆலோசனை: வங்கக்கடலில் உருவாகியுள்ள `கஜா’ புயல் தொடர்பாக சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் எடுக்கப்பட உள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று காலை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, ஜெயக்குமார், விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் சண்முகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் கூடுதல் தலைமை செயலாளர் சத்யகோபால், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் விக்ரம் கபூர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை முதன்மை செயலாளர் கோபால், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் ஹர்மந்தர் சிங், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் உமாநாத், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் சங்கர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனையின்போது, வானிலை ஆய்வு மையம் அளிக்கும் தகவல்களை முன்கூட்டியே பெற்று, அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துறை சார்ந்த அதிகாரிகள் உடனுக்குடன் எடுக்க வேண்டும்.

புயல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் மின் இணைப்பை தற்காலிகமாக துண்டித்து உயிரிழப்பை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுக்க அதிகாரிகளுக்கு முதல்வர் வலியுறுத்தினார். மேலும், புயல் பாதிப்பு இருந்தாலும், அப்பகுதியில் எடுக்கப்பட வேண்டிய மீட்பு நடவடிக்கைகளை தயாராக வைக்கவும் அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தினார். இந்த ஆலோசனையை தொடர்ந்து நேற்று மாலை தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அவரது அலுவலகத்தில் இருந்தபடி, வீடியோ கான்பரன்சிங் மூலம் `கஜா’ புயல் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். முதல்வர் மற்றும் தலைமை செயலாளர் ஆலோசனையை தொடர்ந்து தமிழகத்தில் `கஜா’ புயல் பாதிப்பை சமாளிக்க அனைத்து வகையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு தயார் நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேசிய பேரிடர் மீட்பு படை விரைந்தது: வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தங்கியுள்ளனர். தற்போது கஜா புயல் உருவாகியுள்ளதால், 6 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தமிழக அரசு மற்றும் புதுவை அரசு கேட்டுக் கொண்டதால், 10 படையினர் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதில் சென்னை, கடலூர், ராமநாதபுரத்திற்கு தலா ஒரு படையும், சிதம்பரத்துக்கு 2 படையும், நாகப்பட்டினத்துக்கு 3 படையும் நேற்று இரவே அனுப்பி வைக்கப்பட்டது. அதேபோல, புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு தலா ஒரு படை அனுப்பி வைக்கப்பட்டது. ஒவ்வொரு படையிலும் 35 வீரர்கள் இடம்பெற்றிருப்பார்கள். இப்படையினர், புயல், வெள்ளம், இடிபாடுகளில் இருந்து மக்களை காப்பதற்கான அனைத்து தளவாடங்களுடன் முகாமிட்டுள்ளனர் என்று தேசிய பேரிடர் மீட்பு படையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

* கஜா தற்போது நாகப்பட்டினத்திற்கு வட கிழக்கே 820 கிலோ மீட்டர் தொலையில் நிலைகொண்டுள்ளது.

* இதனால், நாளை கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மிகவும் பலத்த மழை பெய்யக்கூடும்.

* 100 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: