நடுவழியில் மின்சார ரயில்கள் திடீர் நிறுத்தம் தாம்பரம் அருகே தண்டவாளத்தில் விரிசல்: ரயில்கள் தப்பின; பயணிகள் கடும் அவதி

சென்னை: தாம்பரம் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட திடீர் விரிசல் சரியான நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் ரயில் பயணிகள் தப்பினர். நடுவழியில் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். தாம்பரம் மற்றும் கடற்கரை இடையே மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை 8.30 மணியளவில் தாம்பரம்-சானடோரியம் இடையே மின்சார ரயில் ஒன்று சென்று கொண்டிருந்த போது தண்டவாளத்தில் இருந்து கடுமையான சத்தம் வந்தது. இதுகுறித்து அந்த ரயில் டிரைவர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அந்த தகவலின் படி, ரயில்வே ஊழியர்கள் அந்த பகுதியில் தண்டவாளத்தை ஆய்வு செய்தனர். அப்போது தாம்பரம்-சானடோரியம் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாளத்தில் விரிசல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக மின்சார ரயில்களை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி புறப்பட்ட ரயிலும் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதனால் நடுவழியில் ஏராளமான பயணிகளுடன் அந்த ரயில் நின்று கொண்டிருந்தது. தகவல் கிடைத்து ரயில்வே உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்யும் பணியை விரைவுபடுத்தினர்.

அரை மணி நேரத்தில் அந்த பணி முடிக்கப்பட்டு தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் சரிசெய்யப்பட்டது. இதையடுத்து அந்த இடத்தில் ரயில்களை குறைந்த வேகத்தில் இயக்க அறிவுறுத்தப்பட்டது. தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை தொடர்ந்து செங்கல்பட்டு உட்பட பல்வேறு புறநகர் பகுதிகளில் இருந்து சென்னை கடற்கரைக்கு வரும் மின்சார ரயில்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன. இந்த சம்பவத்தால் 45 நிமிடங்கள் மின்சார ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. காலை நேரம் என்பதால் ஏராளமான பயணிகளுடன் ரயில்கள் வந்து கொண்டிருந்தது. அனைத்தும் 45 நிமிடங்கள் வரை நிறுத்திவைக்கப்பட்டு தாமதமாக இயக்கப்பட்டதால் பயணிகள் பெரும் தவிப்புக்குள்ளாகினர். பலர் வேலைக்கு செல்ல முடியாமல் தவித்தனர். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளும் செய்வதறியாமல் திகைத்தனர். தண்டவாள விரிசல் காரணமாக எழும்பூர், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம் போன்ற ரயில் நிலையங்களுக்கு கால தாமதமாக ரயில்கள் வந்ததால் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை தற்காலிகமாக ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சீர்படுத்தியுள்ளனர்.  ரயில் போக்குவரத்து இல்லாத நள்ளிரவு நேரத்தில் நிரந்தரமாக தண்டவாளப்பணி சரி செய்யப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: