கருணாநிதி மறைவுக்கு ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் இரங்கல்: தீர்மானத்தை மு.க.ஸ்டாலினிடம் வழங்கினர்

சென்னை: கருணாநிதி மறைவுக்கு மும்பையில் நடந்த அகில இந்திய ஆர்.எஸ்.எஸ். இயக்க நிர்வாகிகள் கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இரங்கல் தீர்மான நகலை ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்கள். ஆர்.எஸ்.எஸ். இயக்க அகில இந்திய நிர்வாகிகள் பங்கேற்ற அகில பாரத காரியகாரி மண்டல் கூட்டம் மும்பையில் கடந்த அக்டோபர் 31 மற்றும் நவம்பர் 1, 2 தேதிகளில் நடந்தது.  இதில் நிர்வாகிகள் சர்சங் சலக், மோகன் ராவ் பகவத், சுரேஷ் ஜோஷி உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். கூட்டத்தில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தில் கூறியிருப்பதாவது: மு.கருணாநிதி மறைவு அனைவருக்கும் வருத்தம் அளிக்கிறது. அவரது மறைவால் குடும்பத்தினர், நண்பர்கள், இயக்கத்தினர் மீளா துயரில் ஆழ்ந்துள்ளனர்.

 கருணாநிதியின் எண்ணம், செயல், சமூக பணி ஆகியவை சமுதாயத்தில் அவருக்கு பெரும் அங்கீகாரத்தை தந்தது. அந்த அங்கீகாரத்தால் அவரது புகழ் சமுதாயத்தில் என்றும் நிலைத்திருக்கும். கருணாநிதியின் மறைவுக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தின் நகலை ஆர்.எஸ்.எஸ். இயக்க தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே.குமாரசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் சாம்பமூர்த்தி, மாநில அமைப்பாளர் பூ.மு.ரவிகுமார் ஆகியோர் நேற்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார்கள்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: