மத்திய அமைச்சர் மறைவு கவர்னர், முதல்வர் இரங்கல்

சென்னை: மத்திய அமைச்சர் அனந்தகுமார் மறைவுக்கு கவர்னர்,  முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். கவர்னர் பன்வாரிலால் புரோகித்: மத்திய அமைச்சர் அனந்தகுமார் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். சமூகத்திற்கு நல்லது செய்ய விரும்பினார். அவர் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கிறேன். முதல்வர் எடப்பாடி பழனிசாமி: மத்திய ரசாயனம் மற்றும் உரம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சரும், பெங்களூரு தெற்கு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான அனந்தகுமார் உடல் நலக்குறைவால் பெங்களூரு மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அனந்தகுமார் இளம் வயதில் சமூக பணியாற்ற ஆர்வம் கொண்டு அரசியலுக்கு வந்தவர்.  1996 முதல் 2014 வரை பெங்களூரு தெற்கு தொகுதியில் 6 முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற சிறப்புக்குரியவர். அனந்தகுமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்: அனந்தகுமார் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி மிகுந்த மன வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. மிகவும் வேகமாகவும், துடிப்புடனும் செயல்படக்கூடிய அனந்தகுமாரின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்து கொள்கிறேன். அவரின் ஆன்மா நற்கதி அடைய எல்லாம் வல்ல அன்னை சக்தியை பிரார்த்திக்கின்றேன். தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்: மலிவு விலை மருந்துக் கடைகளை  நாடெங்கும் பிரபலமாக்கிய  மத்திய அமைச்சர் அனந்தகுமாரின் மறைவு  கர்நாடக பாஜவிற்கு மட்டுமின்றி அகில இந்தியாவிற்கே பேரிழப்பு. பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி:மத்திய அமைச்சர் அனந்தகுமார் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அரசியலில் இன்னும் உயர்ந்த இடத்துக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இளம் வயதில் அவர் மறைந்தது பாஜவுக்கு பேரிழப்பு என்பதில் ஐயமில்லை. இதேபோல புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்ட தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: