அரசு பள்ளிகளில் ஸ்போக்கன் இங்கிலீஸ் பயிற்சி: அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அரசுப் பள்ளிகளில் ஆங்கில பேச்சுத்திறன் பயிற்சி வகுப்புகளை உருவாக்குவது குறித்து அரசு பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் தமிழ்வழி பள்ளிகளில் ஆங்கில பயிற்சி வகுப்புகளை அறிமுகம் செய்ய கோரியும், மழலையர் வகுப்புகளை துவங்க கோரியும் திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தமிழகத்தில் 80 லட்சம் மாணவர்கள் தமிழ்வழிக் கல்வியில் பயில்கிறார்கள்.  அரசு பள்ளி மாணவர்கள் பள்ளி இறுதி வகுப்பை முடித்த பிறகு, ஆங்கில பேச்சுத்திறன் இல்லாத காரணத்தால், தொழிற்கல்விகளில் சேர முடியாத நிலையும், நல்ல வேலைவாய்ப்புகளை பெற முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் தமிழ்வழி பள்ளிகளில் ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புகளை நடத்துமாறும், எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி மழலையர் வகுப்புகளை அரசுப் பள்ளிகளில் தொடங்குமாறும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆங்கிலவழி வகுப்புகளை தொடங்க அரசு அரசாணை பிறப்பித்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்காக தமிழ்வழி வகுப்புகள் பயிற்றுவிக்கும் பள்ளிகளில் ஆங்கில பேச்சு பயிற்சி (ஸ்போக்கன் இங்கிலீஸ்) வகுப்புகளை நடத்துவதே சிறந்தது. போட்டித் தேர்வுகளில் ஆந்திரா, கேரளா மாநிலங்களே முன்னிலை வகிக்கும் புள்ளிவிவரங்களை ஆராய்ந்தீர்களா என்று கேள்வி எழுப்பினர். மேலும், மனுதாரர் அப்பாவு பிரதான எதிர்க்கட்சியை சார்ந்தவராக இருந்தாலும், அவரது நோக்கம் முழுக்க முழுக்க பொது நலனுடன்தான் உள்ளது. எனவே, இந்த விவகாரத்தை அரசியல் ரீதியாக அரசு பார்க்கக்கூடாது. நீதிமன்றத்தை அரசியல் மேடையாக பயன்படுத்த எப்போதும் அனுமதிக்க மாட்டோம். தமிழ் மட்டுமே கல்வி என சொல்லும் பலரின் பிள்ளைகள் ஆங்கில, இந்தி மீடியங்களில் படிப்பதை காணமுடிகிறது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து, ஆரம்ப, தொடக்க, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் ஆங்கில பேச்சு பயிற்சிகளை நடத்துவது தொடர்பான அரசின் நிலைப்பாட்டை விரிவான பதில் மனுவாக டிசம்பர் 6ம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு அரசுத் தரப்புக்கு   உத்தரவிட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: