அயோத்தியின் கர்சேவக்புரத்தில் ராமர் கோயில் முதல் தளம் ரெடி கற்சிலை பணி 50 சதவீதம் நிறைவு

அயோத்தி: அயோத்தி கர்சேவக்புரம் தொழிற்கூடத்தில், ராமர் கோயிலுக்கான கற்சிலை தயாரிக்கும் பணிகள் 50 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், முதல் தளப் பணிகள் முழுமை அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு நடக்க உள்ள நிலையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் விவகாரம் மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் தீவிரமாக களமிறங்கி உள்ளன. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வரும் நிலையில்,  ராமர் பிறந்த இடத்தில் மீண்டும் கோயிலை கட்டுவதற்கான பணிகளின் தற்போதைய நிலை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் மீண்டும் ராமர் கோயிலை கட்ட விஸ்வ இந்து பரிஷத் சார்பில் ராம் ஜென்மபூமி அறக்கட்டளை கடந்த 1993ல் தொடங்கப்பட்டது. இந்த அறக்கட்டளை கர்சேவக்புரத்தில் தொழிற்கூடத்தை நடத்தி வருகிறது. ராமர் பிறந்த இடத்தை சுற்றிப் பார்க்க வரும் சுற்றுலா பயணிகள், அருகில் உள்ள இந்த தொழிற்கூடத்தையும் பார்வையிடுவது வழக்கம்.

இங்குதான் மீண்டும் ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் இரவும் பகலுமாக நடந்து வருகிறது. தொழிற்கூட பொறுப்பாளர் அன்னு பாய் சோம்புரா கூறுகையில், ‘‘கற்சிலை பணிகள் 50 சதவீதம் நிறைவடைந்துவிட்டது. அதாவது, ராமர் கோயிலின் முதல் தளம் அமைப்பதற்கான பணிகள் அனைத்தும் முடிந்து விட்டன. இதற்கான தூண்கள், கற்சிலைகள் அனைத்து எளிதில் கொண்டு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றத்தின் அனுமதி கிடைத்ததும் கோயில் கட்டுவதற்கான பணிகளை தொடங்கிவிடலாம். அடிக்கல் நாட்டப்பட்டதில் இருந்து 4-5 ஆண்டில் கோயிலை முழுமையாக கட்டி முடித்துவிடலாம். தற்போது பணிகள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இடைவிடாமல் நடந்து வருகிறது’’ என்றார். அதே நேரத்தில் நிதி பற்றாக்குறையால் பணியின் வேகத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: