பலாத்கார குற்றத்தில் பாலின பாகுபாடு ஏன்? பொதுநல மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: பலாத்கார குற்றத்தில் பெண்களை மட்டுமே பாதிக்கப்பட்டவராக கருதும் சட்டப்பிரிவை எதிர்த்து தொடரப்பட்ட பொது நல மனுவை விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், மனுதாரர் இதுகுறித்து நாடாளுமன்றத்தை அணுகலாம் என தெரிவித்துவிட்டது. இந்திய குற்றவியல் நீதி அமைப்பு என்ற தொண்டு நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தொடரப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய தண்டனை சட்டம் (ஐபிசி) 375வது பிரிவில் பெண் ஒருவரை, ஆண் பாலாத்காரம் செய்வது குற்றம் எனவும், இதற்கான தண்டனை 376வது பிரிவிலும் கூறப்பட்டுள்ளது. இந்த குற்றத்தில் பெண் பாதிக்கப்பட்டவராகவும், ஆண் குற்றத்தை செய்பவராகவும் விவரிக்கப்பட்டுள்ளது. பாலின பாகுபாடுடன் கூடிய இந்த சட்டப்பிரிவு, அரசயலமைப்பு சட்டத்தின் 14வது பிரிவு (சம உரிமை), 15வது பிரிவு (மதம், இனம், ஜாதி, பாலினம் அடிப்படையில் பாகுபாடு கூடாது), 21வது பிரிவு (வாழும் உரிமை மற்றும் தனிநபர் சுதந்திரம்) ஆகியவற்றை மீறுவதாக உள்ளது.

ஒரு பெண், மற்றொரு பெண் மீது நடத்தும் பரஸ்பர சம்மதம் இல்லாத பாலியல் தாக்குதல், ஒரு ஆணுக்கு, மற்றொரு ஆண் இழைக்கும் பாலியல் தாக்குதல், திருநங்கைக்கு மற்றொரு திருநங்கை அல்லது ஒரு ஆண் அல்லது ஒரு பெண் இழைக்கும் பாலியல் வன்முறை ஆகியவை குறித்து இந்த சட்டப்பிரிவில் எதுவும் கூறப்படவில்லை. உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிறப்பித்த உத்தரவு ஒன்றில், தனிநபர் ரகசியம் அடிப்படை உரிமை என கூறியுள்ளது. நால்சா தீர்ப்பில் திருநங்கைகள் 3ம் பாலினமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மற்றும் நீதிபதி எஸ்.கே.கவுல் ஆகியோர் அடங்கி அமர்வு, ‘‘சட்டதிருத்த விவகாரம் நாடாளுமன்ற வரம்புக்குள் வருவதால், இதுகுறித்து இப்போது நாங்கள் எதுவும் கூற விரும்பவில்லை. மனுதாரர்கள் தங்கள் கோரிக்கை மனுவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கலாம்’’ என கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்..

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: