ஆஸி. தொடருக்கு முன்பாக தவான் பார்முக்கு வந்தது முக்கியமானது... ரோகித் ஷர்மா உற்சாகம்

சென்னை: இந்திய அணி அடுத்து கடினமான ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கு தயாராகும் நிலையில், தொடக்க வீரர் ஷிகர் தவான் பார்முக்கு வந்தது மிக முக்கியமானது என்று ரோகித் ஷர்மா கூறியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நடந்த டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றிய இந்தியா ஒயிட்வாஷ் செய்து அசத்தியது. முன்னதாக நடந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களிலும் இந்திய அணியே வெற்றியை வசப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த பரபரப்பான 3வது டி20 போட்டியில் இந்திய அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது. 182 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஷிகர் தவான் - ரிஷப் பன்ட் ஜோடி 3வது விக்கெட்டுக்கு அபாரமாக விளையாடி 130 ரன் சேர்த்தது. தவான் 92 ரன் (62 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்), பன்ட் 58 ரன் (38 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தனர். இந்தியா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 182 ரன் எடுத்தது. மணிஷ் (4), கார்த்திக் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஷிகர் தவான் ஆட்ட நாயகன் விருதும், குல்தீப் யாதவ் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.

Advertising
Advertising

இந்த வெற்றி குறித்து கேப்டன் ரோகித் ஷர்மா கூறியதாவது: கடினமான ஆஸ்திரேலிய தொடருக்கு முன்பாக தவான் மீண்டும் சிறப்பாக விளையாடி பார்முக்கு திரும்பியிருப்பது மிக முக்கியமானது. ஒருநாள் போட்டித் தொடரிலும் கூட அவர் நல்ல தொடக்கத்தை பெற்றாலும், துரதிர்ஷ்டவசமாக பெரிய ஸ்கோர் அடிக்கத் தவறினார். சென்னையில் தவான் அபாரமாக ரன் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவியது மகிழ்ச்சி அளிக்கிறது.

ரிஷப் பன்ட்டின் ஆட்டமும் மிகச் சிறப்பாக இருந்தது. தொடக்கத்திலேயே இரண்டு விக்கெட் சரிந்த நிலையில், தவான் - பன்ட் இணைந்து நெருக்கடியை நன்கு சமாளித்தனர். அவர்களின் பார்ட்னர்ஷிப்பே வெற்றிக்கு முக்கிய காரணம். இருவரும் கணிசமாக ரன் குவித்தது அணிக்கு உற்சாகம் அளித்துள்ளது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் எப்போதும் கடினமான ஒன்றாகவே இருக்கும். ஒவ்வொரு முறை அங்கு செல்லும்போதும் வீரராக, அணியாக பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அந்த தொடர் முற்றிலும் வேறானது.

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பெற்ற வெற்றி நமது வீரர்களின் தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது. இதே உத்வேகத்துடன் ஆஸ்திரேலியாவிலும் அசத்துவோம் என நம்புகிறேன். டெஸ்ட் தொடருக்கு முன் டி20 போட்டிகளில் விளையாட உள்ளதால் முதல் டெஸ்ட் பற்றி எதுவும் நினைக்கவில்லை. சில நாள் ஓய்வுக்குப் பிறகு ஆஸி. டி20 தொடருக்கு தயாராவதில் கவனம் செலுத்துவேன். டி20 அணியில் டோனி இடம் பெறாதது பெரிய இழப்புதான். அவரது அனுபவம் எனக்கு மட்டுமல்ல, இளம் வீரர்களுக்கும் ஊக்கசக்தியாக இருக்கும். இவ்வாறு ரோகித் ஷர்மா கூறியுள்ளார். இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் முதல் டி20 போட்டி வரும் 21ம் தேதி பிரிஸ்பேனில் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து 2வது போட்டி மெல்போர்னிலும் (நவ. 23), 3வது போட்டி சிட்னியிலும் (நவ. 25) நடைபெறுகின்றன. முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் டிசம்பர் 6ம் தேதி தொடங்குகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: