அதிபர் சிறிசேனாவுக்கு எதிராக இலங்கையில் அரசியல் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

* தேர்தலை தடுக்க இறுதிக்கட்ட நடவடிக்கை

* ஆணைய உறுப்பினரும் மனுத்தாக்கல்

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா கலைத்தது சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரி, அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் முக்கிய அரசியல் கட்சிகள், தேர்தல் ஆணைய உறுப்பினர் ஆகியோர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேயின் நடவடிக்கை மீது அதிருப்தியடைந்த அதிபர் சிறிசேனா, அவரை நீக்கிவிட்டு புதிய பிரதமராக ராஜபக்சேயை நியமித்தார். அவரால் பெரும்பான்மையை நிருபிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், நாடாளுமன்றத்தை அதிபர் கடந்த 9ம் தேதி கலைத்தார். பொதுத் தேர்தல் ஜனவரி 5ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ராஜபக்சேயும், அதிபர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி, தனது தொண்டர்கள் தொடங்கிய இலங்கை மக்கள் கட்சியில் நேற்று முன்தினம் இணைந்தார். இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் சிறிசேனா பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசிய கூட்டணி, மக்கள் விடுதலை முன்னணி, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உட்பட 10 கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. அதில், ‘‘இலங்கை அரசியல் சாசனத்தில் செய்யப்பட்ட 19வது திருத்தத்தின்படி, நான்கரை ஆண்டுகளுக்கு முன்பாக நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் அதிபருக்கு இல்லை.

இதனால், ‘‘இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா கலைத்தது சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும். அப்போதுதான் நாடாளுமன்ற பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பாக தேர்தல் நடைபெறுவதை தடுக்க முடியும்’’ என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோல், இலங்கை தேர்தல் ஆணைய உறுப்பினர் ரத்னஜீவனும், அதிபர் உத்தரவுக்கு எதிராக மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், நாட்டு மக்களுக்கு டி.வி.யில் உரையாற்றிய அதிபர் சிறிசேனா, ‘‘வரும் 14ம் தேதி நாடாளுமன்றத்தை நடத்த நான் அனுமதித்தால், அங்கு எம்.பி.க்கள் மோதலில் ஈடுபடும் சூழல் உருவாகும். இதன் மூலம் நாடு முழுவதும் வன்முறை பரவும் என்று ஊடகங்களில் தகவல் வெளியானது. நாட்டில் வன்முறை ஏற்படுவதை தடுக்க, நாடாளுமன்றத்தை கலைப்பதுதான் சிறந்த தீர்வு என கருதினேன். நாட்டில் உள்ள ஒன்றரை கோடி வாக்காளர்களும், நியாயமான தேர்தல் மூலம் தங்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்யும் சூழ்நிலை உருவாக்குவது எனது கடமை’’ என கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: