அமைச்சர் ஜெயக்குமார் தொகுதியில் குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் மறியல்: போக்குவரத்து பாதிப்பு

பெரம்பூர்: அமைச்சர் ஜெயக்குமார் தொகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதை கண்டித்தும், லாரிகளில் ேபாதிய குடிநீர் வழங்காததை கண்டித்தும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், ராயபுரம் பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  ராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட பார்த்தசாரதி தெரு, லாலாகுண்டா, பென்சிலர் லைன், மின்ட் மாடம் சிட்டி, ரங்கநாதபுரம், சீனிவாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு மாநகராட்சி சார்பில் பொது குழாய்களில் வழங்கப்படும் குடிநீரில், கடந்த சில மாதங்களாக கழிவுநீர் கலந்து வருவதாக கூறப்பதுகிறது. இதனால், இதை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதை சீரமைக்க வேண்டும், என இப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீரும் போதிய அளவு இல்லாததால், இப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதனை கண்டித்து  இப்பகுதி மக்கள் ராயபுரம் சிமிட்டிரி சாலையில் உள்ள அண்ணா நீரேற்று நிலையம் எதிரே நேற்று காலை திடீர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த தண்டையார்பேட்டை தாசில்தார் சேகர், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையேற்று, பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில்  ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குடிநீர் வழங்க கோரி அமைச்சர் ஜெயக்குமார் தொகுதியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: