அடிப்படை பணிகளுக்கு முன்னுரிமை: அதிகாரிகளுக்கு அமைச்சர் வேலுமணி உத்தரவு

சென்னை: ‘‘குடிநீர், பாதாள சாக்கடை, சாலைகள், மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை  வசதித் திட்டப் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து பணிகளை விரைந்து முடிக்க  நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’’ என அதிகாரிகளுக்கு அமைச்சர் வேலுமணி உத்தரவிட்டுள்ளார். கஜா புயல் முன்னேற்பாடுகள் அம்ரூத் திட்டங்களின்  செயல்பாடுகள் குறித்து  நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய கூட்டரங்கில் நேற்று ஆய்வு  மேற்கொண்டார். அப்போது, புயல் காரணமாக தமிழகத்தின் அனைத்து  மாவட்டங்களிலும்  கன மழை எதிர்பார்க்கப்படுவதால், ஆயத்தப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும். அதிக வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கு, ஏதுவாக புயல் பாதுகாப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். பின்னர், சீர்மிகு நகரத்திற்கான திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தார். இத்திட்டம் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, தஞ்சாவூர், சேலம், வேலுலீர், திருப்பூர் உள்ளிட்ட, 11 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இங்கு ரூ.10,650 கோடி மதிப்பீட்டில் 307 திட்டங்கள் மத்திய அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளன.

அனுமதிக்கப்பட்ட 307 திட்டங்களில், ரூ.58.03  கோடி மதிப்பீட்டில்,   22 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன. ரூ.2,026.70 கோடி மதிப்பீட்டில், 76 திட்டங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் ரூ.1,146.5 கோடி மதிப்பீட்டில், 36 திட்டங்களின் ஒப்பந்தப்புள்ளிகள் கூராய்வில் உள்ளது. ரூ.1,752.10 கோடி மதிப்பீட்டில், 45 திட்டங்களுக்கு, ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு உள்ளது. 76 திட்டங்களுக்கு, ரூ.2,413 கோடி மதிப்பீட்டில் விரைவில் ஒப்பந்தபுள்ளிகள் கோரப்பட உள்ளது. 52 திட்டங்களுக்கு ரூ.3,253.60 கோடி மதிப்பீட்டிலான விரிவான திட்ட அறிக்கை  தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல் அட்டல் நகர்புர புத்துணர்வு மற்றும் நகர்ப்புர மாற்றத்திற்கான திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 12 மாநகராட்சிகள், 15 நகராட்சிகள் மற்றும் 1 பேரூராட்சி (28 நகரங்கள்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.11,441.32 கோடி மதிப்பீட்டிலான 445 திட்டங்கள்  மத்திய அரசினால் அனுமதிக்கப்பட்டுள்ளன.

இதில், ரூ.229.92  கோடி மதிப்பீட்டில், 327 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன. ரூ.5,219.78 கோடி மதிப்பீட்டில், 106 திட்டங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ.1,962.58 கோடி மதிப்பீட்டில், 6 திட்டங்களுக்கு  ஒப்பந்தப்புள்ளி  பெறப்பட்டு கூராய்வில் உள்ளது. ரூ.4,029.04 கோடி மதிப்பீட்டில், 6 திட்டங்களுக்கு, ஒப்பந்தப்புள்ளி  கோரப்பட்டு உள்ளது தெரியவந்தது. இதையடுத்து, நிலுவையில் உள்ள திட்டங்களை விரைந்து முடிக்க வலியுறுத்தினார்.

மேலும் குடிநீர், பாதாள சாக்கடை, சாலைகள், மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதித் திட்டப் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அனைத்து திட்டங்களையும் உயர் அலுவலர்கள் அடிக்கடி ஆய்வு செய்து  தரத்தினை உறுதி செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் அறிவுரை வழங்கினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: