காசிமேட்டில் அதிகாலையில் பரபரப்பு படகு பழுது பார்க்கும் தளத்தில் தீ: பெரும் சேதம் தவிர்ப்பு

தண்டையார்பேட்டை: காசிமேட்டில் மீன்பிடி துறைமுகம் அருகே படகு பழுது பார்க்கும் தளத்தில் நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டு படகுகள் எரிந்து நாசமானது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே விசை படகுகள் பழுது பார்க்கும் தளம் உள்ளது. இங்கு, மீனவர்கள் தங்கள் படகுகளை பழுது பார்க்கவும், புதிய படகு கட்டும் பணியிலும் ஈடுபடுவார்கள். இந்நிலையில், நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் இப்பகுதியில் தேங்கி கிடந்த குப்பையில் திடீரென தீப்பற்றி எரிந்தது. சிறிது நேரத்திலேயே இந்த தீ மளமளவென பழுது பார்க்க நிறுத்தி வைத்திருந்த படகு மீது பரவி எரிய தொடங்கியது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் ஓடிவந்து தீணை அணைக்க முயன்றனர். ஆனால், அதற்கு தீ கொளுந்துவிட்டு எரிய தொடங்கியதால் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு ராயபுரம் மற்றும் தண்டையார்பேட்டை ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து 6 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் குழு வந்து, சுமார் 2 மணி நேரம் போராடி உடனடியாக தீயை அணைத்தனர்.

இதனால் அருகில் இருந்த படகுகளுக்கு தீப்பரவாமல் பெரும் சேதம் தவிற்கப்பட்டது. இதுகுறித்து காசிமேடு மீன்பிடி துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்துக் குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘இங்கு சமூக விரோதிகள் கஞ்சா அடிப்பது, மது அருந்துவது, புகைபிடிப்பது என்று இரவு நேரங்களில் சுற்றித்திரிகின்றனர். அவர்கள் போதையில் சிகிரெட் துண்டுகளை குப்பைகளில் வீசுவிட்டு சென்றுவிடுகின்றனர். மேலும் சிலர் வேண்டும் என்றே தீயை கொளுத்துவிடுகின்றனர். இதனால், அடிக்கடி இதுபோன்று நடக்கிறது. எனவே தேங்கிய குப்பையை உடனடியாக அப்புறப்படுத்தவேண்டும்’’ என்று கூறினர். கடந்த 4 மாதங்களுக்கு முன் படகு பழுதுபார்க்கும் மையத்தில் தீவிபத்து ஏற்பட்டபோது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வைத்திருந்த மீன்கள் தீயில் கருகி நாசமானது. 2 விசை படகுகளும் தீப்பற்றி எரிந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: