அம்பத்தூரில் மூடப்பட்ட கடை மீண்டும் திறப்பு டாஸ்மாக்கை பெண்கள் முற்றுகை

அம்பத்தூர்: அம்பத்தூரில் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் பரப்பரப்பு ஏற்பட்டது. அம்பத்தூர் அடுத்த ஒரகடம் காந்தி நகர் நெடுஞ்சாலையில் பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், கோயில் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. இச்சாலையில் இயங்கி வந்த டாஸ்மாக் கடையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். எனவே, இந்த கடையை மூட வேண்டும், என மாவட்ட ஆட்சியர், டாஸ்மாக் அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தனர். அதன்பேரில் கடந்த ஓராண்டுக்கு முன் இந்த டாஸ்மாக் கடையை அதிகாரிகள் மூடினர். இந்நிலையில், மூடிய கடையை மீண்டும் திறக்க அதிகாரிகள் முயன்றனர். இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். கடும் எதிர்ப்பையும் மீறி நேற்று மதியம் இந்த டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்டது.  இதுபற்றி அறிந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், மேற்கண்ட டாஸ்மாக் கடை முன்பு திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த அம்பத்தூர் போலீஸ் உதவி கமிஷனர் கர்ணன், இன்ஸ்பெக்டர் பொற்கொடி ஆகியோர் போராட்டம் நடத்திய பெண்களை கலைந்து செல்லுமாறு கூறினர். அதற்கு அவர்கள், ‘‘கடையை மூடினால் தான், போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்வோம்’’ என்றனர். அதற்கு, ‘‘நீங்கள் சென்னை மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளித்து, கடையை மூட உத்தரவு கடிதம் வாங்கி வாருங்கள். அதன்பிறகு நாங்கள் கடையை மூட ஏற்பாடு செய்கிறோம்’’, என கூறி போலீசார் சமாதானம் செய்தனர். இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: