வர்தா புயலின்போது சேதமடைந்தது சீரமைக்கப்படாத வழிகாட்டி பலகைகள்: நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மெத்தனம்

புழல்: வர்தா புயலின்போது சேதமடைந்த வழிகாட்டி பலகைகளை இதுவரை அதிகாரிகள் சீரமைக்காததால் வாகன ஓட்டிகள் வழிமாறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 2015ம் ஆண்டு வர்தா புயல் தாக்கியது. இதனால் பல்வேறு இடங்களில் மரங்கள், விளம்பர பலகைகள் அடித்துச் செல்லப்பட்டது. அப்போது, மாதவரம், புழல், செங்குன்றம், பாடியநல்லூர், சோழவரம் உள்ளிட்ட ஜிஎன்டி சாலைகளில் வைக்கப்பட்டிருந்த ராட்சத விளம்பர போர்டுகள், வழிகாட்டி  பலகைகள் கீழே விழுந்து சேதமடைந்தது. வர்தா சுவடுகள் மறைந்து கஜா புயல் தற்போது மிரட்டி கொண்டிருக்கும் நிலையில், சேதமடைந்த பெயர் பலகை அகற்றாமலும் புதிய பெயர் பலகை வைக்காமலும் அப்படியே கிடக்கிறது. இதனால் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களிலிருந்து வரும் வாகன ஓட்டிகள் வழி தெரியாமல் திணறுகின்றனர்.

குறிப்பாக புழல், ஜிஎன்டி சாலை சிக்னல் அருகில் இருந்த இரும்பு வழிகாட்டி பலகை குறுக்கும் நெடுக்குமாக இருப்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் இரும்பு பலகை மீது மோதி விபத்துக்குள்ளாகின்றன. முக்கிய சாலையில் வழிகாட்டிப் பலகைகள் சேதமடைந்திருப்பது குறித்து பல முறை வாகன ஓட்டிகள் புகார் கொடுத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கை இல்லை. சுங்கவரி வசூல் செய்வதில் மட்டும் கவனம் செலுத்தும் அரசு, மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவதில் மெத்தனபோக்கையே கடைப்பிடித்து வருவதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றானர். எனவே, இனியாவது சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமான வழிகாட்டி பலகையை அகற்றிவிட்டு புதிய வழிகாட்டி பலகை வைக்க வேண்டும் என்று வாகனஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: