ரிப்பன் மாளிகையில் செயல்பட்டு வந்த மூலிகை உணவகம் திடீர் மூடல்: மீண்டும் திறக்க பொதுமக்கள் கோரிக்கை

சென்னை: ரிப்பன் மாளிகையில் கடந்த 8 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த மூலிகை உணவகம் திடீரென மூடப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ரூ.15க்கு மூலிகை உணவு வழங்கிய இந்த உணவகத்தை மீண்டும் திறக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகை வளாகத்தில் கடந்த 2011ம் ஆண்டு மூலிகை உணவகம் திறக்கப்பட்டது. இந்த உணவகத்தை சித்த மருத்துவர் டாக்டர் வீரபாபு என்பவர் பொதுநல சேவையாக நடத்தி வந்தார். இந்த உணவகம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை கவர்ந்ததால் அப்போது மேயராக இருந்த சைதை துரைசாமியின் முயற்சியால் இது திறக்கபட்டது. குறிப்பாக இந்த உணவகத்தில் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள் மற்றும் சமையல் கியாஸ் விலை ஏறிய போதும் சரி இந்த உணவகத்தில் கடந்த 8 வருடமாக மூலிகை உணவு ரூ.15க்கு மட்டுமே விற்கப்பட்டது. எந்த ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையிலும் இந்த மூலிகை உணவகத்தில் உணவு விலை ஏற்றப்படவில்லை.

இதனால், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அனைத்து தரப்பட்ட மக்களையும் இந்த மூலிகை உணவகம் வெகுவாக கவர்ந்தது. இதேபோல், ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த மூலிகை உணவகத்தை பயன்படுத்தியும் வந்தனர். உடலுக்கு தீங்கு விளைவிக்கும் துரித உணவுகள் மத்தியில் மிக குறைவான விலையில் கிடைக்கும் இந்த மூலிகை உணவகத்திற்கு வரவேற்பு அதிகமாக இருந்தது. குறிப்பாக, இந்த உணவகத்தில் மூலிகை டீ ரூ.5, முடக்கத்தான் தோசை ரூ.10, எள் உருண்டை, குளி பணியாரம், சோளம், கம்பு பானியாரம் ரூ.10, பயிறு வகைகள் ரூ.5க்கும் என மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், மூலிகை உணவகம் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ளதால் அதை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்கவில்லை. இதனால், இந்த உணவகத்தில் அமைந்துள்ள இருக்கைகளும், கை கழுவும் இடத்தில் உள்ள தண்ணீர் குழாய்களும் உடைந்து சேதம் அடைந்தது. முறையான பராமரிப்பு இல்லாததால் இந்த உணவகம் சுகாதாரமற்ற முறையிலும் காணப்பட்டது.

இதனால், உணவகத்தை பராமரித்து தரவேண்டும் என உணவக உரிமையாளர் வீரபாபு பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டார். ஆனால், நிர்வாகம் இதை கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து உணவகத்தை பராமரிக்க முடியாத சூழ்நிலையால் கடந்த 29ம் தேதி உணவகம் மூடப்பட்டது. பராமரிப்பு பணிகாரணமாக மூலிகை உணவகம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு 15 நாட்கள் ஆகியும் இதுவரை எந்த ஒரு பணியும் நடைபெறவில்லை. இதனால், தினம்தோறும் இந்த உணவகத்தை தேடி வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடனே திரும்பி செல்கின்றனர். எனவே, குறைந்த விலையில் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கக்கூடிய மூலிகை உணவகத்தை பராமரிப்பு செய்து உடனடியாக திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பராமரிப்பு பணி செய்யவில்லை சித்த மருத்துவர் வீரபாபு கூறியதாவது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கவரப்பட்ட இந்த மூலிகை உணவகம் சாமானிய மக்கள் வயிறாற சாப்பிட வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களின் ஆதரவுடன் செயல்பட்டுவரும் இந்த உணவகத்திற்கு மூன்றரை வருடமாக குடிநீர் கூட மாநகராட்சி தருவதில்லை. தினம் தோறும் 50 குடிநீர் கேன்களை விலைக்கு வாங்கியே பயன்படுத்துகிறோம். 8 வருடமாக கட்டிடத்தை வெள்ளை கூட அடிக்கமுடியவில்லை. பராமரிப்பு பணி செய்யாததால் உணவகம் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. இதை சரிசெய்து தரவேண்டும் என அதிகாரிகளிடம் முறையிட்டும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

நான் எனது சொந்த செலவில் பராமரிப்பு பணியை செய்ய அனுமதி கொடுங்கள் என்று கூறியும் எந்த பதிலும் கூறாமல் இழுத்தடிக்கிறார்கள். பராமரிப்பு பணியை செய்து தரும்படி கடிதம் கொடுத்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, சுகாதாரமாக உணவகத்தை நடத்த வேண்டும் என்பதற்காகவே மூடினேன். மாநகாட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் தான் தொடர்ந்து நடத்த முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதுகுறித்து, மாநகராட்சி பொறியாளர் முருகனிடம் கேட்டபோது, ‘‘உணவக கட்டிடத்தை பராமரிப்பு செய்து தருவதற்கு கடிதம் கொடுக்க வேண்டும். ஆனால், அவர் முறையாக அணுகாமல் எங்கள் மீது குறை கூறுகிறார். இப்போது தான் துணை கமிஷனரிடம் கடிதம் கொடுத்துள்ளார். ஓரிரு நாட்களில் அதற்கான செலவு எவ்வளவு ஆகும் என கணக்கிட்டு பணிகள் தொடங்கும்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: