விவசாயிகளே! இந்த சட்டங்களையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க!!

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர் ரகங்கள் எப்படி இந்திய வேளாண்மையின் சமகால அச்சுறுத்தலாக இருக்கிறது என்று பார்த்துவருகிறோம். அமெரிக்காவின் ஜனாதிபதி, உலக வங்கியின் தலைவர், ஐரோப்பிய யூனியன் தலைவர், பில் அண்ட் மொலிட்டா போன்ற பெரிய கார்ப்போரேட்டுகளின் தலைவர்கள் ஆகியோர் அனைவருமே தொடர்ந்து இடைவிடாமல் சொல்லிக்கொண்டிருப்பது ‘இவ்வுலகத்தின் பசியாற்ற நாங்கள் இருக்கிறோம்’ என்ற அபயவாக்கியங்களைத்தான். வளர்ந்துவரும் நாடுகளுக்கு விதைகளை அனுப்பி கோடிக்கணக்கான டாலர் மதிப்புள்ள கடன் சுமையை நம் தலையில் கட்டுவதன் காரணம் வெறும் மானுட அக்கறை மட்டுமே என்று அவர்கள் சொல்கிறார்கள்.

இது உண்மையில்லை என்று நமக்கு நன்கு தெரிந்தாலும் இதை முற்றிலுமாக மறுக்கும் இடத்தில் நம் அரசு இல்லை. இதன் காரணம் நாம் ஏற்கெனவே ஒப்புக்கொண்டுள்ள உலக வர்த்தக ஒப்பந்தங்கங்களின் சிக்கலான தொழில் கொள்கைகள். வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளின் சந்தையைக் கபளீகரம் செய்வதற்காகவே இந்த ஒப்பந்தங்கள் நிகழ்ந்தனவே அன்றியும் உலக சமூகத்தினரின் நலன் கருதி எல்லாம் கிடையாது. மான்சண்டோ போன்ற நிறுவனங்கள் வளர்ந்துவரும் நாடுகளின் விவசாய சந்தையைக் கைப்பற்ற சாம, பேத, தான, தண்டம் போன்ற அத்தனை வழிகளையும் பிரயோகித்துக்கொண்டிருக்கிறார்கள்.

உதாரணத்துக்கு இந்தோனேஷியாவின் அரசு அலுவலர்களுக்கு இந்த நிறுவனம் லஞ்சம் கொடுத்து மாட்டிக்கொண்டதால், அந்த அரசு ஒன்றரை மில்லியன் டாலர் அபராதம் விதித்தனர். மான்சண்டோவின் இந்தியப் பிரிவினது முன்னாள் இயக்குநர் ஜகதீசன், ‘அரசாங்க அனுமதி பெறுவதற்காகவும் இந்தியாவின் விவசாய சந்தையைக் கைப்பற்றுவதற்காகவும் இந்நிறுவனங்கள் பல்வேறு புள்ளிவிவரங்களைத் திரிக்கவும்; செயற்கையாக உருவாக்கவும்; சில தகவல்களை திட்டமிட்டு மறைக்கவும் செய்கின்றன’ என்று வெளிப்படையாக அறிவித்தார்.

குற்றவுணர்வு தாங்காமல் மனசாட்சி விழித்துக்கொண்டு ஒரு அதிகாரி வெளிப்படுத்தியிருக்கும் ரகசியம் இது. இது ஒன்றே இந்நிறுவனங்களின் லாப வெறி எத்தகையது என்பதையும் இதன் பின் இருப்பது வணிக நோக்கமே அன்றியும் மானுட சேவை கிடையாது என்பதையும் வெட்ட வெளிச்சமாக்குகிறது. இந்நிறுவனங்கள் விதைகளை மட்டுமே விற்பனை செய்வது இல்லை. தங்களிடம் உபரியாக உள்ள தானியங்களை ’உணவு உதவி’ என்ற பெயரில் வளரும் நாடுகளுக்குக் கடனாகக் கொடுத்தும் அவர்களை தங்கள் பொறியில் விழவைக்கிறார்கள்.

வளர்ந்த நாடுகளோடு கூட்டணி அமைத்து இந்நிறுவனங்கள் செய்யும் இந்த வணிகத்துக்கு பல்வேறு உலகச் சட்டங்களும் துணையாக இருக்கின்றன. அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகள் தங்கள் விவசாயிகளுக்கு நிறைய மானியங்கள் வழங்குகின்றன. ஆனால், இந்த மானியங்கள், சலுகைகள் பெரும்பாலும் சிறிய விவசாயிகளுக்குச் சென்று சேர்வது இல்லை. வலுவான முதலாளித்துவ கட்டமைப்பு உள்ள இந்நாட்டில் பெரும்பாலான அரசு சலுகைகளை பெரிய விவசாயப் பண்ணைகளே பெற்றுக்கொள்கின்றன. அமெரிக்காவின் பெருங்கோடிஸ்வரர்களான டெட் டர்னர், டேவிட் ராக்ஃபெல்லர் போன்றவர்கள் அரசு மானியம் என்ற பெயரில் மக்களின் வரிப் பணத்தை தங்கள் வாயில் போட்டுக்கொள்கிறார்கள்.

இந்த நாடுகளில் மட்டும் ஆண்டுக்கு முப்பத்தேழாயிரம் கோடி ரூபாய் விவசாயம் மானியம் என்ற பெயரில் இவர்கள் கைகளுக்குச் செல்கிறது. 2006ம் ஆண்டு நமக்கு அளவுக்கு அதிகமாக கோதுமை இருந்தும் பற்றாக்குறை என்று சொல்லி சுமார் ஐந்து லட்சம் டன்னுக்கு மேலே ஆஸ்திரேலிய கோதுமையை எந்த விதமான இறக்குமதி வரிகள், தீர்வைகளும் இன்றி இங்கு இறக்கினார்கள். அது அப்போது கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், தொடர்ந்து அது நடந்துகொண்டுதான் இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம்கூட அமெரிக்காவிலிருந்து ஒன்றரை மெட்ரிக் டன் கோதுமை இறக்குமதியாகியிருக்கிறது.

அதுபோலவே ஐந்து லட்சம் டன் மக்காசோளத்தையும் நாம் தீவனம் மற்றும் உணவுக் காரணங்களுக்காக இறக்குமதி செய்துள்ளோம். இந்தியாவின் பருவ நிலை மாற்றம் மற்றும் மழைப் பொய்ப்பு ஆகியவற்றால் இப்படி கோதுமை உள்ளிட்ட பயிர்களை இறக்குமதி செய்ய வேண்டியதாக இருக்கிறது என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், விவசாய அறிஞர்கள் இதில் உண்மையில்லை என்கிறார்கள். உணவு உற்பத்தியில் நாம் நிஜமாகவே தேவைக்கு அதிகமான உபரி வைத்திருக்கும் அளவுக்கு முன்னேற்றத்தில் உள்ளோம்.

ஆனால், வளர்ந்த நாடுகள் தங்களின் பொருளாதார நலன்களுக்காக தங்களிடம் உபரியாய் உள்ளதை இங்கே தள்ளிவிடுகின்றனர். பொய்யான புள்ளிவிவரங்கள் மூலம் தேவை இருப்பதாக ஒரு காட்சி சித்தரிக்கப்பட்டு அதன் பிறகு இந்த விநியோகம் நடக்கிறது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். இதை எல்லாம் அரசு தரப்பு இதுவரை மறுத்து எவ்விதமான சான்றுகளையும் வைத்தது இல்லை. அரசாங்கங்களைக் கைக்குள் போட்டுக்கொண்டு நடைமுறையில் உள்ள விவசாயம் சார்ந்த சட்டங்களை எல்லாம் மாற்றியமைப்பதுதான் இந்தத் திட்டத்தின் அடுத்த அதிரடி.

கடந்த சில ஆண்டுகளில் நிகழ்ந்த முக்கியமான சட்ட திருத்தங்களை சுருக்கமாகப் பார்ப்போம். விதைச் சட்டம் இந்தச் சட்டத்தின் படி விவசாயிகள் தங்களாகவே விதைகளைச் சேமித்துவைக்கக் கூடாது. கம்பெனிகள் வழங்கும் விதைகளை மட்டுமே தங்கள் நிலத்தில் விவசாயிகள் பயிரிட வேண்டும். இதை மீறி விவசாயிகள் தங்களது விதையையே பயிரிட்டாலோ தங்களுக்குள் கைமாற்றிக்கொண்டாலோ அபராதம் மற்றும் சிறை தண்டனை வழங்கப்படும். இந்த மசோதா எப்போது வேண்டுமானாலும் சட்டமாகலாம் என்ற நிலையில் தற்போதும் விவசாயிகள் தலைக்கு மேல் கத்தியாய் தொங்கிக்கொண்டிருக்கிறது.

வேளாண் கவுன்சில் சட்டம் வேளாண்மை என்பது அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதற்காகவே இதனை முன்மொழிந்தார்கள். பொதுவாக, இயற்கை விவசாயிகள் அனைவருமே விவசாயப் பல்கலைக்கழகங்களில் படித்துப் பட்டம் பெற்றவர்களாய் இருக்க வாய்ப்பு குறைவு. பெரும்பாலானவர்கள் தங்கள் ஆர்வம் மற்றும் பட்டறிவின் மூலம் பல்வேறு ஆய்வுகள் செய்து, தேடி இயற்கை வேளாண்மை சார்ந்து பணியாற்றுபவர்களாகவே இருப்பார்கள். இவர்களை குறி வைத்துதான் இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டது.

இந்தச் சட்டம் இப்படியான, இயற்கை வேளாண்மை ஆர்வலர்கள் பணியாற்றுவதைக் கட்டுப்படுத்த முயன்றது. வேளாண் பல்கலைக் கழகங்களில் சான்றிதழ் பெற்றவர்கள் மட்டுமே விவசாயம் சார்ந்த கருத்தரங்கள், செயல் விளக்கக் கூட்டங்கள், நடத்த வேண்டும். வேறு யாரும் சான்றிதழ் இல்லாமல் நடத்தினால் ரூபாய் ஐந்தாயிரம் அபராதம் அல்லது ஆறு மாத சிறை தண்டனை வழங்கப்படும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் இந்த சட்டம் தாக்கல் செய்யப்பட்டது. இயற்கை வேளாண்மை ஆர்வலர்கள் உட்பட பலதரப்பட்டவர்களும் இந்தச் சட்டத்தை கடுமையாக எதிர்த்ததால் இது கைவிடப்பட்டது.

இந்திய பயோடெக்னாலஜி கட்டுப்பாட்டு ஆணையச் சட்டம் (BRAI) மரபணு மாற்ற விதைகள் இங்கு அமுலானபோது ஏற்பட்ட சர்ச்சைகளைத் தொடர்ந்து மரபணு பொறியியல் ஒப்புதல் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு மரபணு விதைகள் நமக்குத் தேவையில்லை என்று பரிந்துரை செய்ததைத் தொடர்ந்து பிரதம மந்திரியின் நேரடி விஞ்ஞான ஆராய்சிக்குழுவின் மூலமாக பின் கதவின் வழியாக நுழைந்தன மரபணு மாற்றப்பட்ட விதைகள். அதன் தொடர்ச்சியாக, இந்த மரபணு ஒப்புதல் குழுவின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டது.

தற்போது, இந்தக் குழுவால் பரிந்துரைகளை வழங்க மட்டுமே முடியும். ஒப்புதல் அளிப்பது, அனுமதிப்பது போன்ற அதிகாரங்கள் இவர்களுக்கு இல்லை. மேலும், இந்த ஒப்புதல் குழு சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் கீழ் முன்பு இயங்கிவந்தது. புதிய குழு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் பயோடெக்னாலஜி துறையில் கீழ் இயங்கும் என்று மாற்றப்பட்டது. இதுவும் எப்போது வேண்டுமானாலும் சட்டமாகலாம் என்ற நிலையில் மசோதாவாக உள்ளது. புஷ்பா பார்கவா போன்ற மரபியல் விஞ்ஞானிகள் இந்தச் சட்டத்தைக் கறுப்புச் சட்டம் என்கிறார்கள்.

சட்டத்துக்குப் புறம்பான, நியாயமற்ற, விஞ்ஞானத்தன்மையற்ற மசோதா இது என்று தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்கள். விவசாய விளைபொருள் விற்பனைக் குழு சட்ட திருத்தம் ஏற்கெனவே உள்ள இந்தச் சட்டத்தின்படி விவசாயிகள் தங்கள் விளைபொருட்களைக் கட்டுப்படுத்தப்பட்ட சந்தைகள் மூலமாக மட்டுமே  விற்பனை செய்ய முடியும். இதில் ஒரு திருத்தத்தை ஏற்படுத்தி விவசாயிகள் யாரிடம் வேண்டுமானாலும் விற்கலாம். எந்த தனியார் நிறுவனம் வேண்டுமானாலும் விவசாயிகளிடம் கொள்முதல் செய்துகொள்ளலாம் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

இது பார்ப்பதற்கு நல்ல விஷயம்தானே என்று தோன்றினாலும். வியாபாரிகள் கையில் விவசாயம் முழுமையாகச் செல்லவும். விவசாயிகள் தங்கள் நிலங்களையும் இழந்து அதே நிலத்தில் விவசாயக் கூலிகளாக எஞ்சவுமே இந்தச் சட்டம் வழிவகுக்கும். இந்த சட்டத்தின் நீட்சியாக ஒப்பந்த விவசாயம் எனும் மாபெரும் வணிக சூது உள்ளது. அதைப் பற்றி அடுத்த இதழில் பார்ப்போம். இனி இந்த வார பாரம்பரிய நெல்லான செம்பாளை பற்றிப் பார்ப்போம். செம்பாளை தமிழகத்தின், காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டாரத்தில் உள்ள இடையூர் பகுதியில் பிரதானமாக விளையக் கூடியது.

ஒரு ஏக்கருக்கு சுமார் 1,125 கிலோ நெல் தானியமும், சுமார் 1,350 கிலோ வைக்கோலும், மகசூலாகக் கொடுக்கக்கூடியது. மத்திய, மற்றும் நீண்டக்கால நெல் வகையைச்சார்ந்த நெற்பயிர்கள் சாகுபடி செய்ய ஏற்ற பருவகாலமான சம்பா பட்டம் எனும் பருவத்தில், 21 - 25 நாட்கள் நாற்றங்கால் அமைத்து பயிரிடப்படுகிறது. செம்பாளை நூற்று ஐந்து நாட்கள் வயதுடைய குறுகியகால பயிர். இதை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தொடங்கும் சம்பா பட்டத்திலும் தமிழகத்தின் பிற பகுதிகளில் சாகுபடி செய்யலாம்.

நேரடி நெல் விதைப்பு, மற்றும் நாற்று நடுதல் என இரண்டு முறைகளையும் பின்பற்றி விளைவிக்கப்படும் இந்த நெற்பயிர், ஆளுயரம் வளர்ந்து, முதிர்வடையும் காலத்தில் தண்டுடைந்து சாயும் தன்மை உடையது. செம்பாளையின் அரிசி செம்பழுப்பு நிறத்தில் பெரு நயத்துடன் தடித்துக் காணப்படும். செந்நெல்லுக்கே உரிய நற்பண்புகள் யாவும் சிறப்பாக வாய்க்கப்பெற்றது செம்பாளை. தொடர்ந்து இதை உண்டுவந்தால் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். ரத்தசோகை போன்ற பிரச்சனைகள் அகலும். உடல் பலகீனமானவர்கள், வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது. பொரி, அவல் போன்றவைகள் தயாரிக்கவும் ஏற்ற ரகம்.

(செழிக்கும்)

இளங்கோ கிருஷ்ணன்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: