×

வண்ணமயமாக தீபாவளியை கொண்டாடியது நம்ம கோயமுத்தூர்!

சமீபத்தில் யாராவது நம்ம கோயமுத்தூருக்கு போயிட்டு வந்தீங்களா? போயிருந்தீங்கன்னா, வண்ணங்களில் குளிச்சிருப்பீங்க.
நகரத்துலே எங்கே திரும்பினாலும் கண்ணுக்கு விருந்துதான். குறிப்பாக கட்டங்களிலும், சுவர்களிலும் வண்ணமயமான ஓவியங்கள்.
யார் வரைந்தது என்று விசாரித்தோம். ஸ்டார்ட் ஃபவுண்டேஷன் (St+art Foundation) என்றார்கள். நாம் சந்திக்கப் போனபோது ஒரு கட்டிட உயரத்துக்கு சாரம் கட்டி, அதில் வண்ணப் பக்கெட்டுகளை மாட்டிவிட்டு கையில் பிரஷ்ஷோடு இருந்தார் ஃபவுண்டேஷன் நிர்வாகியான கிரண்.

“ஏன் சார், கண்ணுலே பட்ட இடத்துலே எல்லாம் டிராயிங் வரைஞ்சுக்கிட்டு இருக்கீங்க?” “நாங்கள்லாம் ஸ்டார்ட் இந்தியா பவுண்டேஷன் என்ற அமைப்பை சேர்ந்தவங்க. நான் அதில் முக்கிய பொறுப்பில் இருக்கேன். இந்த அமைப்பு துவங்கி நாலு வருஷமாச்சு. இந்த அமைப்பின் முக்கிய நோக்கம் ‘எல்லாருக்கும் ஓவியம்’ என்பது தான். அதாவது பொது இடங்கள், அரசு மற்றும் இதர கட்டிடங்கள் மற்றும் சாலையோற சுவர்களில் ஓவியங்களை தீட்டுவதன் மூலம் சாதாரண மக்களுக்கு ஓவியங்களை எடுத்து செல்வது தான் எங்களின் நோக்கம்.

இந்த நான்கு வருடத்தில் தில்லி, மும்பை, பெங்களூரூ, ஐதராபாத் போன்ற முக்கிய நகரங்களில் ஓவியங்களை தீட்டி இருக்கோம். தற்போது எங்களின் பிராஜக்ட் கோவையில் நடந்துக் கொண்டு இருக்கிறது”. “குறிப்பாக கோவையை தேர்வு செய்ய காரணம் என்ன?” “ஏற்கனவே மும்பை, ஹைதராபாத் போன்ற நகரங்களில் உள்ள சுவர்களை வண்ணமாக்கி இருக்கோம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கோவையில் தான் முதன் முதலில் எங்களின் தடத்தை பதிவு செய்து இருக்கோம். தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து, கோவைதான் இப்போது வளர்ந்து வரும் நகரம்.

இது இரண்டாம் நிலை பட்டியலில் உள்ள நகரம். மேலும் இங்கும் ஐடி நிறுவனங்களும் நிறைய இருப்பதால் இந்த நகரம் தொழில்நுட்பத்தில் மட்டும் இல்லாமல் உள்கட்டமைப்பிலும் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. இது இப்போ ஸ்மார்ட் சிட்டி பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது. இது போன்ற நகரத்தில் எங்களின் ஓவியங்களை அமைக்கும் போது அங்குள்ள மக்கள் அதை பற்றிய புரிதல் ஏற்படும்”. “ஏன் சாலையில் ஓவியம்?” “பொதுவா ஓவியர்களின் காவியங்கள் கண்காட்சியில் இடம் பெறுவது வழக்கம். இவர்களின் ஓவியங்களை ஒரு மரச்சட்டத்திற்குள் வைத்து அதற்கான சிறப்பு கண்காட்சிகள் தான் காலம் காலமாக நடந்து வருகிறது.

இந்த கண்காட்சியை பார்க்க ஒரு சில நபர்கள் மட்டுமே வருவார்கள். இந்த கண்காட்சியில் இடம் பெரும் ஓவியங்கள் அவர்களுக்கு மட்டுமே புரியக் கூடியதாக உள்ளது. அப்படியே சாதாரண மக்கள் வந்தாலும் இவர்கள் வரைந்து இருக்கும் ஆப்ஸ்ட்ராக்ட் ஓவியங்கள் பற்றிய புரிதல் அவர்களுக்கு இருக்கப் போவதில்லை. அப்படி இல்லாமல் அனைத்து வெகுஜனங்களுக்கும் புரியும் விஷயமாக ஓவியங்கள் இருக்க வேண்டும். அவர்கள் அன்றாடம் வாழ்வில் பார்க்கும் விஷயங்கள், நபர்கள் மற்றும் அவர்களின் கலாச்சாரத்தை ஒன்றியதாக ஓவியங்கள் இருக்க வேண்டும்.

அது தான் அவர்களின் மனசில் நிற்கும். அப்ப அந்த ஓவியங்களை பொது இடமான சாலைகள் மற்றும் கட்டிடங்களில் தானே வரைய முடியும். அதைத்தான் நாங்க செய்றோம்”. “கோவையில் இன்னும் எவ்வளவு நாள் இருப்பீங்க?” “இங்க ஒரு மாசம் பிராஜக்ட். நாங்க கடந்த மாதம் தான் இங்கு வந்தோம். கோவை முனிசிபல் கார்ப்பரேஷன் உதவியுடன் எங்க வேலை இங்கு துவங்கியுள்ளது. தமிழ்நாட்டில் எங்களின் முதல் பிராஜக்ட். எங்களின் வேலையை மற்ற இடங்களில் பார்த்து கோவை முனிசிபல் கார்ப்பரேஷன் எங்க அமைப்பை அனுகியது.

அதன் மூலம் நாங்க இங்க வேலையை துவங்கி இருக்கோம். இங்கு இரண்டு கட்டமாக வேலை செய்யும் எண்ணம் உள்ளது. ஒன்று சாலைகளில் உள்ள சுவர்களை அலங்கரிப்பது. இரண்டாவது பெரிய அரசு சார்ந்த கட்டிடங்கள் மற்றும் குடிசை மாற்று வாரியம் குடியிருப்பு சுவர்களிலும் ஓவியங்களை தீட்ட இருக்கிறோம். இங்கு அரசு கலைக் கல்லூரி சாலை உள்ளது. அங்கு நான்கு விதமான ஓவியங்களை வரைய திட்டமிட்டு இருக்கிறோம். இந்த சாலை நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. அடுத்து கோவையின் டவுன் ஹால்.

இது கோவையின் மிகவும் முக்கியமான லேண்ட்மார்க். வரலாறு மிக்க இடமும் கூட. அங்கு அமைந்துள்ள மணிக்கூண்டில் வரையும் எண்ணம் உள்ளது. ேகாவையின் அரசு புற்றுநோய் மருத்துவமனையில் எங்களின் வேலை முடிந்துவிட்டது. மேலும் இங்குள்ள சின்னச் சின்ன தெருக்கள் மற்றும் சாலைகளில் மற்றும் கட்டிடங்களிலும் ஓவியங்கள் வரைந்து வருகிறோம். இப்போது இரண்டு ஓவியர்கள் தொடர்ந்து வேலை பார்த்து வருகிறார்கள்”. “உங்களோடு யார் வேண்டும் என்றாலும் சேர்ந்து வரையலாமா?” “விருப்பம் உள்ளவர்கள் எங்களுடன் இணைந்து செயல்படலாம்.
ஆனால் ஓவியர்களை தேர்வு செய்வதற்கு என தனி குழு உள்ளது. மேலும் ஒரு ஓவியத்தை இரண்டு பேர் மட்டுமே வரைவார்கள். அவர்கள் அந்த பிராஜக்ட்டை முடித்ததும் கிளம்பிவிடுவார்கள். வேறு இரண்டு பேர் வேறு பிராஜக்ட்டை தொடர்வார்கள். ஓவியங்களை பொருத்தவரை நாங்க மிகவும் கவனமாக தேர்வு செய்கிறோம். இது அடிப்படை மக்களுக்கு புரிய வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக செயல்படுகிறோம். ஒரு பிராஜக்ட் எடுக்கும் முன்பு, முதலில் அந்த ஊருக்கு சென்று ஆய்வு செய்வோம். அதாவது அந்த ஊரின் கலாச்சாரம், பாரம்பரியம், வரலாறு மற்றும் மக்களின் பழக்க வழக்கம் எல்லாவற்றையும் புரிந்துக் கொள்வோம்.

அதை சார்ந்து தான் எங்களின் ஓவியங்கள் இருக்கும். குறிப்பிட்டு சொல்லணும்ன்னா கோவைக்கு என தனி கலாச்சாரம் உண்டு. அந்த கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வண்ணமாக தான் எங்களின் ஓவியங்கள் இருக்கும். ஓவியர்களை பொருத்தவரை எல்லாரும் வேறு ஊர்களை ேசர்ந்தவங்க. தில்லி, மும்பை ஏன் வெளிநாட்டில் இருந்தும் ஓவியர்கள் இங்கு வந்து வேலையில் ஈடுபடுகின்றனர்”. “இந்த திட்டத்தின் நோக்கம்தான் என்ன?” “நான் ஏற்கனவே சொன்னது போல ஓவியங்களை ஒரு மரச்சட்டத்திற்குள் அடைப்பது எங்களின் நோக்கம் இல்லை.

இது பரந்து விரிந்த உலகம். எல்லாருக்கும் எல்லாமும் வேண்டும். ஒரு ரக மக்கள் மட்டுமே ரசிக்க கூடிய ஓவியத்தை நாம் பலரும் புரியும் வண்ணம் அமைத்து கொடுக்க நினைச்சோம். அதன்படி தான் நான்கு வருடமா செயல்பட்டு வருகிறோம். இரண்டாவது கலைஞர்கள் பலர் இங்குள்ளனர். அவர்களில் எல்லாருக்கும் வாய்ப்பு கிடைக்கும்ன்னு சொல்ல முடியாது. திறமை இருந்தும் அதை வெளிப்படுத்த வழி இல்லாமல் இருப்பார்கள். அந்த பாதையை நாங்க ஏற்படுத்தி தருகிறோம். மூன்றாவது ஒரு நகரத்தை வண்ணமயமாக மாற்றி அமைக்க வேண்டும்.

அழுக்கு படிந்த கட்டிடங்கள், குப்பை சாலைகளுக்கு மத்தியில் ஒரு வண்ணமயமான ஓவியத்தை பார்க்கும் போது மனசு லேசாகும். மேலும் மக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் தான் ஓவியங்களை அமைத்து வருகிறோம். அதனால் மக்களுக்கும் தங்களின் நகரத்தை வேறு ஒரு கண்ணோட்டத்தில் பார்க்க முன்வருவார்கள். ஏன் சுத்தமாக வைத்துக் கொள்ளும் எண்ணமும் ஏற்படும்”. “அடுத்த திட்டம்?” “இப்ப கோவையில் இருக்கோம்.

அடுத்து மும்பை, கோவாவிற்கு பயணம் செல்லும் எண்ணம் உள்ளது. ஒரு நகரத்திற்கு சென்று அங்கு பிராஜக்ட் முடிச்சாச்சுன்னு அப்படியே விட்டுட மாட்டோம். வருடத்திற்கு ஒரு முறை மறுபடியும் அதே நகரத்திற்கு செல்வோம். அங்கு நாங்க ஏற்கனவே வரைந்த ஓவியங்களை பார்த்து அதை சீரமைப்போம். மேலும் வேறு எங்கெல்லாம் வண்ணம் தீட்டலாம்ன்னு யோசிப்போம். மும்பை, ஐதராபாத், தில்லின்னு... பல ஊர்களுக்கு மறுபடியும் ஒரு விசிட் அடிக்கணும்’’.

- ப்ரியா

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Deepavali , Diwali, Coimbatore, colorful
× RELATED நெருங்கும் தீபாவளி பண்டிகை: பட்டாசு உற்பத்தி பணிகள் சிவகாசியில் தீவிரம்