விபத்தினால் உயிரிழப்பு ஏற்படுவது 20 சதவீதம் வரை குறைந்துள்ளது: சமயமூர்த்தி, போக்குவரத்து துறை ஆணையர்

போக்குவரத்து துறை நெடுஞ்சாலைத்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சி துறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகள் சார்பில் மாதம்தோறும் கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்தில், சாலைகளில் விபத்துகளினால் உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை அடிப்படையாக வைத்து, புதிய திட்டம் ஒன்று செயல்பாட்டுக்கு ெகாண்டு வரப்படுகிறது. இதுபோன்று செயல்படுத்தப்படும் புதிய திட்டங்களினால் தான் தமிழகத்தில் விபத்தினால் உயிரிழப்பு ஏற்படுவது கடந்த காலங்களை காட்டிலும் குறைந்துள்ளது. குறிப்பாக, 20 சதவீதம் வரை விபத்தினால் உயிரிழப்பு ஏற்படுவது கடந்தாண்டை காட்டிலும் குறைந்துள்ளது. அடுத்த ஆண்டும் இன்னும் குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த சாலை பாதுகாப்பு திட்டத்தின் மூலம் சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் இந்திய  தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனியாக நிதி ஒதுக்கி அதற்கான பணிகளை செய்து வருகிறது. அதேபோன்று நெடுஞ்சாலைத்துறை ஒருங்கிணைந்த சாலைகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் (சிஆர்ஐடிபி) மூலமும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. குறிப்பாக, சிஆர்ஐடிபி மூலம் 2 சதவீத நிதியை கொண்டு சாலை பாதுகாப்புக்கான பணியை செய்கிறது.

போக்குவரத்து துறை சார்பில் மாவட்ட கலெக்டர், மாவட்ட எஸ்பி மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு சாலை பாதுகாப்புக்கான நிதியை தருகிறது. இந்தாண்டில் மட்டும் ரூ.1 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்து செலவிடப்பட்டுள்ளது. சாலை சந்திப்புகளை மேம்படுத்துவது, சாலைகளில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் வைப்பது, ஸ்பீடு பிரேக்கர்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் இந்த நிதியின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாலை பாதுகாப்பை சிறப்பாக மேற்கொள்ளும் மாவட்ட கலெக்டருக்கு விருது வழங்குவதற்கு முதல்வர் எடப்பாடி பழனி சாமி உத்தரவிட்டுள்ளார். இதற்கான அரசாணையும் சமீபத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி சாலை பாதுகாப்பு நடவடிக்கையை சிறப்பாக மேற்கொள்ளும் மாவட்ட கலெக்டர் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கி கவுரவிக்கப்படுவார். மேலும், அவர்களுக்கு ரூ.25 லட்சம் தரவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அந்த பணத்தை கொண்டு மாவட்ட பகுதிகளில் விபத்து ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து சாலை பாதுகாப்பு வசதி செய்து தரப்படுகிறது. மேலும், சாலை பாதுகாப்பை சிறப்பாக செயல்படுத்தும் மாநகர போலீஸ் கமிஷனர்களில் ஒருவர் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. மேலும், அவர்களுக்கு ரூ.10 லட்சம் தரப்படுகிறது. அந்த பணத்தை அவர்களும் சாலை பாதுகாப்பு பணிகளுக்கு செலவிடலாம்.

சாலை பாதுகாப்பை பற்றி போக்குவரத்து துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு அளிக்கப்படுகிறது. இது போன்று பொதுமக்களுக்கும் ஆண்டுக்கு ஒரு முறை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடத்தப்படுகிறது. நாட்டிலேயே விபத்துகளினால் உயிரிழப்பு ஏற்படுவதில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருப்பது உண்மை தான். வரும் ஆண்டுகளில் சாலை விபத்தினால் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். சாலை பாதுகாப்பு குறித்து போக்குவரத்து துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: