வேதாரண்யம் பகுதியில் மழையால் அகல் விளக்கு தயாரிப்பு பாதிப்பு: மண்பாண்ட தொழிலாளர்களுக்கு வருவாய் இழப்பு

வேதாரண்யம்: வேதாரண்யம் பகுதியில் மழையால் அகல் விளக்கு தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா, தாணிக்கோட்டகம், செம்போடை ஆகிய பகுதிகளில் மண்பாண்டம் செய்யும் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் உள்ளனர். இவர்கள் அகல் விளக்கு, சட்டி, பானை, குடம், பூந்தொட்டி, அடுப்பு, திருமண சடங்குகளுக்கு உள்ள மண் பாண்டங்கள், கோயில் கும்பாபிஷேக கலயங்கள் செய்து விற்பனை செய்கின்றனர். மண் எடுப்பதில் மிகுந்த சிரமம் உள்ளதால் ஒரு மாட்டு வண்டி களிமண் ரூ.1500க்கு வாங்கி மண்பாண்டங்களை செய்கின்றனர். பண்டிகை காலமான கார்த்திகை, பொங்கல் ஆகியவற்றிற்கு மண் பாண்டங்கள் செய்ய தயாரான போது வடகிழக்கு பருவமழை பெய்ய துவங்கியதால் இத்தொழில் முற்றிலும் முடங்கியது. மழையிலும் கார்த்திகைக்கு அகல்விளக்கு செய்யும் பணியை துவங்கி உள்ளனர். மழையால் 10,000 முதல் 20,000 வரை விளக்குகள் செய்யும் ஒரு குடும்பத்தினர் சுமார் ஆயிரம், இரண்டாயிரம் விளக்குகளே செய்துள்ளனர். இதனால் தொழிலில் லாபம் இருக்காது என தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

 மேலும் சென்ற ஆண்டு பொங்கலுக்கு உற்பத்தி செய்த சட்டி, பானைகள் விற்பனையாகாமல் உள்ளன. இத்தொழிலில் மண்பாண்டங்கள் செய்து சுடுவதற்கு என்று சரியான சூளை வசதிகூட இல்லாமல் உள்ளது. இப்பகுதியில் உள்ள மண்பாண்ட தொழிலாளர்களுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை வங்கிகடனோ, அரசு உதவியோ கிடைக்கவில்லை. மின் இயந்திரங்கள் இல்லாமல் திருவையிலேயே வைத்து செய்வதால் பெரியஅளவில் தொழில் செய்ய முடியவில்லை. நவீனமாக மெழுகில் செய்யும் விளக்குகள் விற்பனைக்கு வந்தாலும் மண் விளக்குகளுக்கு இன்னமும் மவுசு குறையாமல் உள்ளது. அரசு எங்களுக்கு வங்கி மூலம் கடன் கொடுத்து உதவினால் மின் உபகரணங்கள் வாங்கி உற்பத்தியை பெருக்கி அதிக லாபம் பெறமுடியும் என மண்பாண்ட உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: