காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் நீர்திறப்பு 2,000 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 700 கனஅடியில் இருந்து 2,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் நடப்பாண்டில் 4 முறை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அதன் பின்பு, மழை குறைந்ததையடுத்து நீர்வரத்து மற்றும் நீர்மட்டம் சரிய தொடங்கியது. தற்போது, வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் விநாடிக்கு 6,066 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 6,144 கனஅடியாக அதிகரித்தது. நீர்திறப்பை பொறுத்தமட்டில், டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 500 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக விநாடிக்கு 700 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. வரத்தை காட்டிலும், நீர்திறப்பு குறைவாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 99.42 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 99.74 அடியாக உயர்ந்தது. நீர்இருப்பு 64.50 டிஎம்சியாக உள்ளது.

இந்தநிலையில், நேற்று காலை 9 மணியளவில் காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 2,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காவிரி டெல்டா பகுதிகளில் தேவை அதிகரித்துள்ளதால் நீர்திறப்பு அதிகரித்துள்ளதாகவும், நீர்வரத்தும்-திறப்பும் இதேநிலையில் இருந்தால் இன்று அதிகாலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டும் என எதிர்பார்ப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதேவேளையில் ஒகேனக்கல் காவிரியில் வரும் நீரின் அளவு சரிந்துள்ளது. நேற்று முன்தினம் விநாடிக்கு 6,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 4,700 கனஅடியாக குறைந்தது.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED நீர்மட்டம் சரிவு எதிரொலி : மேட்டூர்...