சிறுமி தலை துண்டித்து கொலை ‘சினிமா பார்த்து தவறு செய்த என்னை தூக்கில் போடுங்கள்’: நீதிமன்ற வாயிலில் வாலிபர் புலம்பல்

சேலம்: ‘சினிமா பார்த்து தவறு செய்து விட்டேன், என்னை தூக்கில் போடுங்கள்’ என சிறுமியை தலை துண்டித்து கொலை செய்த வாலிபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு திரும்பியபோது புலம்பினார்.சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தெற்கு காட்டுகொட்டாயை சேர்ந்தவர் ராஜலட்சுமி (14). இவர் கடந்த 22ம் தேதி வீட்டில் இருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் என்பவர் தலையை துண்டித்து கொலை செய்தார். ஆத்தூர் போலீசார் வழக்கு பதிந்து தினேஷ்குமாரை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர். அவர் மீது போக்ஸோ சட்டம் பாய்ந்தது. அதே நேரத்தில் குண்டர் தடுப்பு சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில்,  கைதான தினேஷ்குமார் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல நடிப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் 15 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. இந்நிலையில், சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தினேஷ்குமாரை, பலத்த போலீஸ் பாதுகாப்புடன், மகளிர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். அப்ேபாது அவரை வரும் 22ம் தேதி மீண்டும் ஆஜர்படுத்துமாறு நீதிபதி விஜயகுமாரி உத்தரவிட்டார். அதன்பின் அவரை பலத்த பாதுகாப்புடன் போலீசார் வண்டியில் ஏற்றினர். அப்போது அவர், ‘என்னை கொன்று விடுங்கள்,  தூக்கில் போடுங்கள், சினிமா பார்த்து பெரிய தவறை செய்து விட்டேன்’’ என புலம்பினார். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதற்காக அவரிடம் கையெழுத்து வாங்கப்பட்டது. அப்போது அவருடைய பெயரை தெளிவாக எழுதினார். எனவே அவர் மனநலம் பாதிக்கப்பட்டது போல் நடிப்பதாக போலீசார் தெரிவித்தனர்.  பின்னர் அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED காதலிக்க மறுத்ததால் ஆத்திரம் கழுத்தை...