7 டன் மலர்களைக்கொண்டு ஏழுமலையான் கோயிலில் 14ம் தேதி புஷ்பயாகம்

திருமலை: ஏழுமலையான் கோயிலில் வருகிற 14ம் தேதி புஷ்பயாகம் நடக்கிறது. இதையொட்டி ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கில் வரக்கூடிய கார்த்திகை மாதம் ஸ்ராவன  நட்சத்திரம் அன்று புஷ்பயாகம் நடத்தப்பட்டு வருகிறது. 15வது நூற்றாண்டில் இந்த புஷ்பயாகம் ஏழுமலையான் கோயிலில் நடத்தப்பட்டு வந்த நிலையில் காலப்போக்கில் கைவிடப்பட்டது. பின்னர் திருமலை திருப்பதி தேவஸ்தான ஆஸ்தான வித்வான்  வேதாந்த ஜெகநாதச்சாரியலு 1980ம் ஆண்டு நவம்பர் 14 தேதி முதல்  மீண்டும் ஏழுமலையான் கோயிலில் புஷ்பயாகத்தை தொடங்கினார்.

அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் புஷ்பயாகம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற 13ம் தேதி ஆகம முறைப்படி அர்ச்சகர்கள் புஷ்பயாகத்திற்கான அங்குரார்ப்பணம்  நடத்துகின்றனர்.  தொடர்ந்து 14ம் தேதி சுப்ரபாத சேவை தொடங்கப்பட்டு அர்ச்சனை மற்றும் நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி உற்சவ மூர்த்திகளை கல்யாண மண்டபத்திற்கு கொண்டு வருகின்றனர். பின்னர் திருமஞ்சனம் நடத்தப்பட்டு யாகசாலையில் யாகங்கள்  நடத்தப்படவுள்ளது.
இதைத்தொடர்ந்து சாமந்தி, சம்பங்கி, ரோஜா, மல்லி,  துளசி, மருதம் உள்ளிட்ட 18 ரகமான மலர்களை கொண்டு சுவாமி உற்சவருக்கு புஷ்பயாகம் நடத்தப்படுகிறது. வேதமந்திரங்கள் முழங்க, 7 டன் மலர்களால் சுவாமிக்கு புஷ்பயாகம் நடக்கிறது. புஷ்பயாகத்தையொட்டி சகஸ்ர கலசாபிஷேகம், கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரமோற்சவம், வசந்த உற்சவம் ஆகிய சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. அங்குரார்ப்பணம் நடக்கும் 13ம் தேதி வசந்த உற்சவம் மற்றும் சகஸ்கர தீப அலங்கார சேவையையும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED பூச்செடிகள், கன்றுகள் பெற மக்கள் முன்பதிவு செய்யலாம்