×

பணமதிப்பிழப்பு நடவடிக்கை 2 ஆண்டு நிறைவு பொருளாதார வளர்ச்சி கடும் பாதிப்பு

* கட்சி தலைவர்கள், நிபுணர்கள் கண்டனம் * நாடு முழுவதும் காங்கிரஸ் இன்று ஆர்ப்பாட்டம்

புதுடெல்லி: நாட்டில் புழக்கத்தில் இருந்த 500, 1000 நோட்டுகளை மத்திய அரசு மதிப்பிழப்பு செய்து, நேற்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதித்து விட்டதாக  அரசியல் தலைவர்களும், பொருளாதார நிபுணர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் இன்று நாடு முழுவதும் போராட்டம் நடத்துகிறது.  நாட்டில் புழக்கத்தில் இருந்த பழைய ₹500, ₹1000 நோட்டுகள் செல்லாது என கடந்த 2016ம் ஆண்டு, நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி திடீரென அறிவித்தார். இதை கேட்டு மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். மக்கள் தங்களிடம்  இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. பழைய நோட்டுகளுக்கு பதிலாக புதிய வடிவில் அச்சடிக்கப்பட்ட ₹2000, ₹500 நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன.

ஆனால், இவற்றின் விநியோகம் மக்களின் தேவைக்கு ஈடு கொடுக்கவில்லை. வங்கிகளில் பல மணி நேரம் வரிசையில் காத்து கிடந்து பணத்தை மாற்றும் நிலை ஏற்பட்டது. பணத் தட்டுப்பாட்டால் பல தொழில்கள் முடங்கின.  ரியல் எஸ்டேட் தொழில் பெரும் சரிவை சந்தித்தது. பங்குச் சந்தையில் பங்குகளின் மதிப்பு வெகுவாக சரிந்தது. நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தியும் கணிசமாக குறைந்து பொருளாதார வளர்ச்சியை பாதித்தது. புதிய  கரன்சியை அச்சடிக்கவும், அதை நாடு முழுவதும் கொண்டு செலவும் அரசு பெருந்தொகையை செலவு செய்தது. அரசின் இந்த நடவடிக்கையை பல்வேறு கட்சிகளும் கடுமையாக விமர்சித்தன. நாடாளுமன்ற விவாதத்திலும் இந்த  விவகாரம் புயலை கிளப்பியது. ஆனால், கருப்பு பணம், கள்ள நோட்டு ஆகியவற்றை ஒழிக்கவும், தீவிரவாத அமைப்புகளுக்கு கிடைக்கும் நிதியை தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய அரசு விளக்கம் கூறியது.  ஆரம்பத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை வங்கிகளும், சர்வதேச அமைப்புகளும் பாராட்டின. அதே நேரம், இது திட்டமிடப்படாத நடவடிக்கை என பல்வேறு தரப்பினர் விமர்சித்தனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பாக,  நாட்டில் ₹15.41 லட்சம் கோடி மதிப்புள்ள ₹500, ₹1000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.

இந்த நடவடிக்கையால், கருப்பு பணம் பெருமளவில் வங்கிகளுக்கு திரும்பாது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், புழக்கத்தில் இருந்த ₹15.30 லட்சம் கோடி வங்கிகளுக்கு திரும்பி விட்டதாக  அதிர்ச்சி தகவலை தெரிவித்தது. ₹10,720 கோடி  மட்டுமே வங்கிக்கு திரும்பவில்லை. இதனால், கருப்பு பணத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சி தோல்வி அடைந்து விட்டதாக பொருளாதார நிபுணர்கள்  கூறினர்.இந்நிலையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு நேற்றுடன் 2வது ஆண்டுகள் நிறைவடைந்தது. இதை முன்னிட்டு, பல்வேறு கட்சித் தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை  கடுமையாக விமர்சித்துள்ளனர். இந்த செயலால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு விட்டதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறுகையில், “பொருளாதாரத்தில் தவறான வழிகாட்டுதல்கள் எவ்வாறு ஒரு தேசத்தை நீண்ட ஆண்டுகளுக்கு அழிக்கின்றன என்பதை நினைவுகூரும் நாள் இது. பொருளாதார கொள்கைகள்  கவனமாக கையாளப்பட வேண்டியவை. அதில், சாகசங்கள் செய்ய முடியாது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வயது, பாலினம், மதம், வேலை என எந்த பாகுபாடும் இன்றி ஒவ்வொரு தனி மனிதனும் பாதிக்கப்பட்டான். காலம்  ஒரு பெரிய மருந்து. ஆனால், துரதிருஷ்டவசமாக பண மதிப்புழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட காயங்கள் மற்றும் வடுக்களை நீண்ட நாட்களுக்கு பிறகும் காண முடிகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி கடுமையாக  குறைந்துள்ளது. பணம் மதிப்பிழப்பு அதிர்ச்சியில் இருந்து சிறுகுறு தொழில்கள் இன்னும் மீளவில்லை” என்றார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது டிவிட்டர் பக்கத்தில், ‘இன்று கருப்பு தினத்தின் 2வது ஆண்டு. பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டதில் இருந்தே அதனை பேரிடர் என நான் கூறி வருகிறேன். புகழ் பெற்ற  பொருளாதார நிபுணர்கள், சாதாரண மக்கள் மற்றும் அனைத்து நிபுணர்களும் இதனை தற்போது ஒப்புக்கொள்வார்கள். பண மதிப்பிழப்பு என்ற மிகப் பெரிய ஊழலால் அரசு நாட்டை ஏமாற்றி விட்டது. கோடிக்கணக்கான மக்களின்  பொருளாதாரத்தை அழித்து விட்டது. இதை செய்தவர்களை மக்கள் தண்டிப்பார்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், “மோடி அரசின் நிதி மோசடிகளின் பட்டியல் முடிவு இல்லாதது என்ற போதிலும், பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை என்பது இந்திய பொருளாதாரம் தன் மீதே ஏற்படுத்திக்  கொண்ட ஒரு ஆழமான காயமாகும். 2 ஆண்டுகள் கழிந்த பிறகும் நாடு ஏன் இத்தகைய பேரழிவிற்கு தள்ளப்பட்டது என்பது மர்மமாக உள்ளது” என்றார்.மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறுகையில், ‘‘பண மதிப்பிழப்பு நடவடிக்கை கருப்பு பணத்தை ஒழிக்கும், ஊழலை ஒழிக்கும், டிஜிட்டல் பண பறிமாற்றம் மட்டுமே நடைபெறும் என மோடி அரசு கூறியது.  ஆனால், 2 ஆண்டுகளுக்குப் பிறகும் தற்போது மவுனமாக உள்ளனர். மோடி தனி மனிதனாக நாட்டின் பொருளாதாரத்தையும், மக்களின் வாழ்வாதரத்தையும் அழித்ததுதான் உண்மை’’ என்றார். பண மதிப்பிழப்பு நடவடிக்கையை  எதிர்க்கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சித்தாலும், அதை மத்திய அரசு ஒப்புக் கொள்ளவில்லை.

இது குறித்து நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில், ‘‘இந்திய பொருளாதாரத்தை முறைப்படுத்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை உதவியது. இந்தியாவுக்கு வெளியே உள்ள கருப்பு பணத்தை மீட்க இத்திட்டம் உதவியது.  வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்தது. கருப்பு பணத்தை பதுக்கியவர்கள், அபராத தொகை செலுத்தி அவற்றை வங்கிக்கு கொண்டு வந்தனர். மறுத்தவர்கள் மீது கருப்பு பண சட்டத்தின் கீழ் வழக்கு  தொடரப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் சொத்து விவரம் முழுவதும் அரசிடம் வந்தது. ஜன்தன் கணக்கு மூலம் மக்கள்  வங்கிகளுடன் இணைந்தனர். பணத்தை முடக்குவது கரன்சி தடையின் நோக்கம் அல்ல.  இந்த நடவடிக்கையால் மக்கள் வரி வரம்புக்குள் வந்து, பொருளாதாரம் முறைப்படுத்தப்பட்டது’’ என குறிப்பிட்டுள்ளார். பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் 2ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, நாடு முழுவதும் இன்று போராட்டம்  நடத்த காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. இதில், அக்கட்சியை சேர்ந்தவர்களும், கூட்டணி கட்சித் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.

முன்கூட்டியே திட்டமிட்டு நிறைவேற்றிய சதி திட்டம் ராகுல் கடும் தாக்கு
காங்கிரஸ்  தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,  ‘பண மதிப்பிழப்பு நடவடிக்கை என்பது, முன்கூட்டியே திட்டமிட்டு  நிறைவேற்றப்பட்ட கொடூர சதித் திட்டம். சூட் பூட் அணிந்த தனது  நண்பர்களின்  கருப்பு பணத்தை வெள்ளையாக்க மோடி புத்திசாலித்தனமாக செய்த முறைகேடு. இது  தெரியாமல் செய்யப்பட்ட செயல் அல்ல’ என குறிப்பிட்டுள்ளார். மேலும்  ராகுல் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நோட்டு தடை என்பது லட்சக்கணக்கான  மக்களின் உயிரை பறித்த விபத்து. கடந்த காலங்களில் நாடு பல்வேறு துன்ப  சம்பவங்களை சந்தித்துள்ளது. பண மதிப்பிழப்பு  நடவடிக்கை திட்டமிட்டு  நடத்தப்பட்ட நிதி மோசடி. நோட்டு தடை தொடர்பான முழு உண்மையும் இதுவரை  வெளிவரவில்லை. இது, இந்திய மக்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல்.  இந்த திட்டத்தை  அமல்படுத்தியதால் இந்தியாவில் 15 லட்சம்  வேலை வாய்ப்புகள்  பறிக்கப்பட்டுள்ளது. ஏழைகளின் ஏழைகளான பொதுமக்கள், தங்கள் சேமிப்பு  பணத்தை மாற்றுவதற்காக நீண்ட வரிசையில் நின்று உயிரிழந்தனர். இவ்வாறு 120   பேர் பலியாகினர். முறைப்படுத்தப்படாத தொழில்கள் அழிந்ததுடன் சிறுகுறு  தொழில்கள் அடியோடு வீழ்ந்து விட்டன’ என கூறியுள்ளார்.

காங்கிரசுக்கு பாஜ 10 கேள்வி
பண மதிப்பிழப்பு நடவடிக்கையை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ள நிலையில்,  அக்கட்சிக்கு பாஜ 10 கேள்விகளை எழுப்பியுள்ளது. இது தொடர்பாக பாஜ தனது  டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘மத்திய அரசு  ஊழலுக்கு எதிராக  எடுத்துவரும் நடவடிக்கையை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? அவர்கள் பீதியடைவது  ஏன்? கருப்பு பணம் வைத்துள்ளவர்களிடம் இருந்து வெகுதொலைவில் உள்ள அவர்கள்  கவலை அடைவது ஏன்? எளிதாக  வணிகம் செய்ய உகந்த நாடுகள் பட்டியலில் இந்தியா  இடம்பெற்றுள்ள நிலையில் உலகளவில் இந்திய பொருளாதாரத்திற்கு அங்கீகாரம்  கிடைத்துள்ள நிலையில் காங்கிரஸ் வருத்தமடைவது ஏன்? மிகப்பெரிய அளவில் நில   ஊழல் மற்றும் வெளிநாட்டு வங்கி கணக்கில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ள முன்னாள்  மத்திய அமைச்சர் சிதம்பரத்தை அமலாக்கத் துறை குற்றவாளி என குறிப்பிட்டுள்ள  நிலையில், அவர் எங்கள் பொருளாதார கொள்கையை  குற்றம்சாட்டுவது ஏன்? பண  மதிப்பிழப்பு நடவடிக்கை பொருளாதாரத்தை முறைப்படுத்தியுள்ளது. இதனால்தான்,  காங்கிரஸ் இதை எதிர்க்கிறதா? கடந்த 2 ஆண்டுகளில் கூடுதலாக 2 கோடிக்கும்  அதிகமானோர் வருமான வரி  செலுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில்,  பண மதிப்பிழப்பு நடவடிக்கையை காங்கிரஸ் குற்றம்சாட்டுவது ஏன்? தற்போது  சிறு வணிகர்கள் மீது கவனம் செலுத்தும் காங்கிரஸ், அவர்கள் தலைமையிலான   கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது கண்டு கொள்ளாதது ஏன்? அப்போது அவர்கள்  செய்தது எல்லாம் ரெய்டு மட்டுமே’ என கூறப்பட்டுள்ளது.

* 2016, நவம்பர் 8க்கு முன்பு வரை நாட்டில் புழக்கத்தில் இருந்த பழைய 500, 1000 நோட்டுகளின் மதிப்பு 15.41 லட்சம் கோடி.
* வங்கிகளுக்கு திரும்பியது 15.30 லட்சம் கோடி.
* வங்கிக்கு திரும்பாத தொகை 10,720 கோடி.
* புதிய 2,000, 500 நோட்டுகளை அச்சடிக்க மத்திய அரசு செய்த செலவு 584 கோடி.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Monetary, completion, Economic ,growth ,serious blow
× RELATED மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை விருதம்பட்டு பகுதியில்