வருகிறது கேடிஎம் 125 டியூக் பைக்

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அங்கமாக செயல்பட்டு வரும் ஆஸ்திரிய பைக் தயாரிப்பு நிறுவனமான கேடிஎம், இந்தியாவின் ஸ்போர்ட்ஸ் ரக பைக் மார்க்கெட்டில் அதிக வரவேற்பை பெற்ற பிராண்டாக விளங்குகிறது. குறிப்பாக,  கேடிஎம் நிறுவனத்தின் டியூக் பிராண்டிற்கு இந்திய இளைஞர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கிறது. இந்நிலையில், டியூக் பிராண்டின் வரவேற்பையும், சந்தையையும் வலுப்படுத்தும்விதமாக, டியூக் 125 பைக் மாடலை  இந்தியாவில் அறிமுகம் செய்ய கேடிஎம் திட்டமிட்டுள்ளது. அடுத்த மாதமே இப்புதிய மாடல் பைக் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. மகாராஷ்டிர மாநிலம், சகன் பகுதியில் செயல்பட்டு வரும் பஜாஜ் ஆலையில் ஏற்கனவே கேடிஎம் டியூக் 125 பைக் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இந்த பைக்கை  இந்தியாவில் களமிறக்கினால், அதிக விலை நிர்ணயிக்க வேண்டி வரும் என்று கருதி, கேடிஎம் இதுவரை தள்ளிப்போட்டு வந்தது. தற்போது கேடிஎம் டியூக் 125 பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்ய சாதகமான சூழல்  நிலவுவதாக கேடிஎம் கருதுகிறது. இதையடுத்து, இப்புதிய மாடலை அறிமுகம் செய்யும் முயற்சியில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

புதிய கேடிஎம் டியூக் 125 பைக் மாடலானது, டியூக் 390 பைக் மாடலைப்போன்ற டிசைன் தாத்பரியங்களை பெற்றிருக்கிறது. மேலும், வெளிநாடுகளில் விற்பனையில் உள்ள மாடலில் எல்இடி ஹெட்லைட் மற்றும் டிஎப்டி  திரையுடன்கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் கொடுக்கப்பட்டுள்ளன. இப்புதிய பைக் மாடலில் 124.7 சிசி லிக்யூடு கூல்டு இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. இந்த பியூவல் இன்ஜெக்க்ஷன் சிஸ்டம் கொண்ட இன்ஜின்  அதிகபட்சமாக 14.7 பிஎச்பி பவரையும், 11.8 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், 125 சிசி பைக் மார்க்கெட்டில்  சக்திவாய்ந்த பைக் மாடலாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இப்புதிய கேடிஎம் டியூக் 125 பைக் மாடலில் 43 மிமீ WP அப்சைடு டவுன் போர்க்குகளும், பின்புறத்தில் WP மோனோஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன.

முன்புறத்தில் 300 மி.மீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 230 மி.மீ  டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. பாஷ் நிறுவனத்தின் டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் உள்ளது. இப்புதிய மாடல் நிச்சயம் ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் பெரிய அளவிலான அதிர்வலைகளை  ஏற்படுத்தும் என்பதில் மாற்றம் இல்லை. எனினும், இந்தியாவில் விலையை குறைத்து நிர்ணயிக்க வேண்டிய கட்டாயத்தில் கே.டி.எம் உள்ளது. இதற்காக, சில தொழில்நுட்ப அம்சங்கள் குறைக்கப்படும் வாய்ப்பும் இருக்கிறது.  விலை விவரம் அறிவிக்கப்படவில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: