நெசவாளர்களை வாழவைக்கும் மக்கள் பாதை ஆடையகம்!

உணவு உடை தொடங்கி அனைத்திலும் நம் நாட்டுப் பொருட்களைவிட அயல்நாட்டுப் பொருட்களையேவிரும்பி வாங்கி வருகிறோம். காலத்தின் மாற்றம் நம்மிடம் பெரிய அளவிலான மாற்றத்தை கொண்டுவந்துவிட்டது. இதனால், மறைமுகமாக நம்மை நாமே அழித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை மறுப்பதற்கில்லை. தொழில், விவசாயம், கல்வி, பொருளாதாரம் என அனைத்துக்கும் இதுதான் இன்றைய நிலைமை. ஆனால், இந்த நிலையை மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளனர் ‘மக்கள் பாதை கைத்தறி ஆடையகம்’ என்ற அமைப்பினர்.

Advertising
Advertising

நாம் ஏன் நம் நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களை வாங்க வேண்டும், அதனால் நம்மவர்கள் நன்மை பெறுவார்களே என்ற உயரிய நோக்கத்தோடு மக்கள் பாதைகைத்தறி ஆடையகம் அமைப்பு நம் நாட்டு நெசவாளர்களிடம் அவர்கள் உற்பத்தி செய்யும் துணிகளை வாங்கி விற்று, அதில் வரும் வருமானத்தை அவர்களுக்கே திருப்பிக் கொடுத்து வருகிறது. நம் நாட்டில் இருக்கும் ஏழை நெசவாளர்கள் தம் கைகளாலேயே பார்த்துப் பார்த்து நெய்த தரமான சட்டைகள் மற்றும் சேலைகள் என அனைத்தும் கிடைக்கும்போது தீபாவளிக்கு ஆடைகள் வாங்க ஏன் அதிகப் பணத்தை செலவழிக்க வேண்டும்? என இச்சேவையைச் செய்யும் இவ்வமைப்பின் பொறுப்பாளர் சி. சண் முகத்திடம் பேசினோம்.

‘‘ஏழை நெசவாளர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தோடு ‘லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து’ என்ற கொள்கையுடன் வாழும் சகாயம் ஐஏஎஸ்-ன் வழிகாட்டுதலில் செயல்படும் இயக்கம்தான் ‘மக்கள் பாதை’ எனும் அமைப்பு. இதில் ஓர் அங்கம்தான் தறி திட்டத்தின் கீழ் இயங்கும், ஏழை நெசவாளர்களுக்கு உதவும் ‘மக்கள் பாதை கைத்தறி ஆடையகம்’ என்பது. நெசவாளர்கள் ஒரு சேலையை நெய்ய தன்னுடைய கை, கால்களை சுமார் 19,000 தடவை இயக்க வேண்டும் என்பதோடு மட்டுமின்றி ஒரு நாளைக்கு 12 மணி நேரம் தான் மட்டுமின்றி நெசவு  உபதொழிலுக்கு தன் மனைவி குழந்தைகளும் சேர்ந்து வேலை செய்தாலும் இவர்களுடைய மாத வருமானம் ரூ.10,000க்கும் குறைவாகவே இருக்கும்.

தங்களின் வாழ்வை அபகரித்தவர்கள் யாரென்று தெரியாமலேயே தறிக்குழியான சவக்குழியில் வாழ்வை தொலைத்துக்கொண்டிருக்கிறார்கள் இந்த நெசவாளர்கள். சந்தேகம் இருப்பின்  நெசவாளிகளிடம் சென்று அவர்களின் குறைகளைக் கேளுங்கள். அதற்கான காரணத்தையும், காரணமானவர்களையும் யார் என்று கேளுங்கள். நெசவாளர்களைப் பற்றி எவரும் நினைக்கவில்லை என்ற அறக்கோபத்தின் விளைவால் உருவானதே ‘மக்கள்பாதை கைத்தறி ஆடையகம்’ ’’ என்று ஆதங்கத்தோடு தெரிவித்தார் சண்முகம்.

‘‘மக்கள் பாதை தன்னார்வலர்கள் தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டத்திலுள்ள ஏழை  நெசவாளர்கள் வாழும் இடங்களுக்கும் சென்று கைத்தறி ஆடைகளை வாங்கிவருகின்றனர். உதாரணமாக, கடலூர் மாவட்டத்தில் கைலிகள், சட்டைகள், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் முஷ்ணத்திலிருந்து சேலைகள், ஈரோடு, சேலம் மற்றும் சென்னிமலையிருந்து போர்வை, துண்டு, சால்வை, படுக்கை விரிப்பு மற்றும் வேட்டி, நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலிலிருந்து சேலைகள், மதுரை மாவட்டத்திலிருந்து சுங்கடிச்சேலைகள், நாகர்கோவில் மாவட்டத்திலுள்ள வடசேரியில் பெண்கள் மட்டுமே நெய்யும் வேட்டிகள் போன்றவற்றை நேரடியாக கொள்முதல் செய்து அம்பத்தூர் எஸ்டேட் சி.டி.எச் சாலையில் உள்ள மக்கள் பாதை கைத்தறி ஆடையகக் கடையில் விற்பனை செய்கிறோம்.

இந்தக் கடை கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதம் 1-ஆம் தேதி சகாயம் ஐஏஎஸ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. நெசவாளர்களிடம் வாங்கும் ஆடைகளின் விற்பனையில் கிடைக்கும் நிகர லாபம் முழுவதையும் மீண்டும் அந்த நெசவாளர் களுக்கே அந்தந்த மாவட்டத்திற்குச் சென்று காசோலையாகக் கொடுக்கிறோம். கடந்த இரண்டரை வருடங்களில் சுமார் மூன்று லட்சம் ரூபாயை  3 ஆயிரம் நெசவாளர் குடும்பத்திற்கு கொடுத்து அவர்களுடைய வாழ்வாதாரத்தை  உயர்த்தியுள்ளோம். இனிமேலும், நம் நெசவாளர்கள் கஷ்டப்படக்கூடாது என்பதற்கான பல திட்டங்களையும் தீட்டி வைத்துள்ளோம்’’ என்று கூறும் சண்முகம் நெசவாளர்களுக்கு உதவிட தாங்கள் மேற்கொள்ளும் வேறு பல முயற்சிகளையும் விவரித்தார்.  

‘‘தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் தோளில் சுமந்து நெசவுத் துணிகளை விற்று உற்பத்திக்கு ஆதரவு அளித்தனர். ஆனால், மக்கள் பாதை அமைப்பினரோ நெசவு உற்பத்திக்கு ஆதரவு தருவதோடு, லாபப் பணத்தையும் கொடுத்து அவர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்துகின்றனர். இதைத் தவிர எங்களுடைய பிற விற்பனை என்னவென்றால் சென்னையில் உள்ள பல பள்ளிகளிலும், பல வர்த்தக மையங்களிலும் விற்பனை செய்கிறோம். உதாரணமாக, ஆவடியில் உள்ள அரசுப் பள்ளிகளிலும், டான் போஸ்கோ, SBIOA இன்டர் நேஷனல் ஸ்கூல், மகளிர் கிறிஸ்துவ கல்லூரி, விஜிபி, சென்னையில் உள்ள பல அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும், நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்திலும் இதைப் போன்று பல இடங்களிலும் விற்பனை செய்துள்ளோம்.

இந்த தீபாவளிக்கு எண்ணற்ற புதிய ரகங்களை வாங்கி விற்பனைக்கு வைத்துள்ளோம். மிகவும் தரமானவை. நம் நெசவாளர்களின் உழைப்பு அதில் உள்ளது. அவற்றை நீங்கள் எங்கள் கடைக்குத்தான் வந்து வாங்க வேண்டும் என்று அவசியமில்லை. ஆன்லைன் மூலமும் விற்பனை செய்து வருகிறோம். www.store.makkalpathai.org என்ற இணையதள முகவரியில் ஆன்லைனில் நீங்கள் ஆர்டர் செய்தால் உங்கள் வீட்டிற்கே வந்து சேரும். அதன் மூலம் வரும் லாபம் நம் நாட்டு நெசவாளர்களுக்குப் போய்ச்சேரும். வருங்காலங்களில் உங்கள் ஆதரவால் மட்டுமே ஏழை நெசவாளர்களுக்கு உதவி செய்ய முடியும் என்பதை உறுதியுடன் நம்புகிறோம். ஏழை நெசவாளர்களைப் பாதுகாப்போம். அவர்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்துவோம்.

இந்த இரண்டரை வருடத்தில் மக்கள் பாதை கைத்தறித் ஆடையகத்தின் மூலம் கைத்தறி துணிகளை வாங்கிய நல்ல  உள்ளங்களுக்கு எங்கள் நன்றியையும் தீபாவளி நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.’’ என்று வாழ்த்துகளோடு முடித்தார். நெசவாளர்களை வாழவைக்க நாமும் கைத்தறி விற்பனை மையங்களில் துணிகளை வாங்குவோம் தீபாவளியைக் கொண்டாடுவோம்.

- தி.ஜெனிபா

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: