பெண்களுக்கும் ஆண்களுக்கும் அசத்தலான கைத்தறி ஆடைகள்!

ஒவ்வொரு வருடமும் களைகட்டும் தீபாவளி திருநாளுக்கான விற்பனைச் சந்தையில் முன்னணி ஆடை மற்றும் ஆபரண நிறுவனங்கள் புதுப் புது யுத்திகளையும் மக்கள் கவனத்தை ஈர்க்கும் தயாரிப்புகளையும் கொண்டுவருவது நாம் அறிந்த ஒன்றுதான். ஆனால், கோ-ஆப்டெக்ஸ் என்று சொல்லப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கமும் (Tamil Nadu Handloom Weavers’ Cooperative Society) ஒவ்வொரு ஆண்டும் புதிய தயாரிப்புகளை இந்த விற்பனைக் களத்தில் இறக்குவது நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கடந்த ஆண்டு உயிரெழுத்துகளைக் கொண்ட பட்டுச் சேலையை விற்பனைக்கு கொண்டுவந்தது கோ-ஆப்டெக்ஸ்.

இது பாரம்பரிய கைத்தறி நெசவாளர்களை ஒருங்கிணைக்கும் கூட்டுறவு  அமைப்பாகும். தமிழக அரசின் கைத்தறி, துணிநூல், காதி,கிராமத் தொழில் மற்றும் கைவினைப் பொருட்கள் துறையினால் (Department of Handlooms, Handicrafts, Textiles and Khadi) இவ்வமைப்பு நிர்வகிக்கப்படுகிறது. இதற்குச் சொந்தமான விற்பனை மையங்கள் தமிழ்நாட்டின் பல ஊர்களில் உள்ளன.நவநாகரிக உடைகள் ஆயிரம்தான் வந்தாலும் காட்டன் சட்டையையும், காட்டன் புடவையையும் தரமானதாக தேடி உடுத்துபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்களுக்காக பல புதுவிதமான ஆடைகளை கோ-ஆப்டெக்ஸ் கொண்டுவந்துள்ளது. அப்படி என்னென்ன புது வரவுகள் உள்ளன என்பதை சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள மண்டல அலுவலகத்தில் அதன் நிர்வாக இயக்குநர் டி.என்.வெங்கடேஷை சந்தித்து கேட்டபோது அவர் ஒரு பட்டியலே கொடுத்தார். அவற்றில் சிலவற்றை இப்போது பார்ப்போம்…

1000 புட்டா பருத்தி மற்றும் பட்டுச் சேலைகள்

பரமக்குடி பகுதியில் உள்ள சிறந்த கைத்தறி நெசவாளர்களின் கைவண்ணத்தில் கண்கவரும் பாரம்பரியமிக்க வடிவமைப்புகளுடன் கூடிய 1000 புட்டா பருத்தி மற்றும் பட்டு சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது.இவ்வகை சேலைகள் நெய்வதற்கு ஜக்காடு பெட்டியுடன் கூடிய தறிகளில், 2/100 பருத்தி நூல் மற்றும் தூய பட்டு கொண்டு சேலை முழுவதும் 1000 புட்டாக்களுடன் பாரம்பரிய வடிவமைப்புகளான ருத்திராட்சம், சக்கரம், அன்னம், மயில் போன்ற உருவங்களும் முந்திப் பகுதி நுண்ணிய நூல் வேலைப்பாடு கொண்டும் நெய்யப்பட்டு கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.அழகிய வடிவமைப்புகளுடன் கூடிய பருத்தி மற்றும் பட்டு நூலினால் நெய்த இவ்வகை சேலைகள் வாடிக்கையாளர்களால் பெரிதும் விரும்பும் வண்ணம் கைத்தறியினால் நெய்யப்பட்டு அனைவரும் விரும்பி அணியும் வகையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.ஒரு சேலையின் விற்பனை விலை = ரூ.4,200

மென்பட்டு டை X டை சேலைகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழநி பகுதியில் உள்ள கைத்தறி நெசவாளர்களால் தரமான தூய பட்டுநூலில் டை X டை வடிவமைப்பு உருவாக்கப்பட்டு இச்சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இச்சேலையின் ஊடை நூல் பலவித நவீன வடிவமைப்புகளில் டை X டை சாயமிடப்பட்டு கைத்தறி நெசவாளர்களால் மிகுந்த கவனத்துடன் வடிவமைப்பு மாறாமல் உற்பத்தி செய்யப்படுகிறது. சேலையின் முந்திப்பகுதியும் உடல் பகுதியும் வெவ்வேறு காண்ட்ராஸ்ட் வண்ணங்களில் சாயமிடப்பட்டு நெய்யப்படுகிறது.தரமான தூய பட்டில் நெய்யப்படுவதால் இச்சேலையின் பளபளப்பு மற்றும் டை X டை வடிவமைப்புகள் மற்றும் மென்மையான உணர்வு ஆகியன வாடிக்கையாளர்களை மிகவும் கவரும் வகையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

ஒரு சேலையின் விற்பனை விலை= ரூ.7,700

பருத்தி மற்றும் பட்டுத் துப்பட்டாக்கள்

இளவயது பெண்கள் பெரிதும் விரும்பி அணியும் ஆடைகளில் துப்பட்டாவும் ஒன்றாகும். இவ்வகையான வாடிக்கையாளர்களைக் கவரும் வண்ணம் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனமானது பல வகையான துப்பட்டா ரகங்களை தயார் செய்துவிற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. பட்டுநூலினைக் கொண்டு, பாரம்பரிய வடிவமைப்புகளுடன் கூடிய துப்பட்டாக்கள் ஆரணி பகுதியிலுள்ள கைத்தறி நெசவாளர்களால் நெய்யப்பட்டுள்ளது. மேலும், உயர்தரப் பருத்தி 80s X 80s நூலினைக் கொண்டு, இரண்டு ஜங்கார்டு பெட்டிகளுடன் கூடிய கைத்தறிகளில் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த கைத்தறி நெசவாளர்களாலும், மதுரை பகுதியில் சுங்குடி துப்பட்டாக்களும் மற்றும் கோவை பகுதியில் உள்ள நெசவாளர்களால் பாரம்பரிய வடிவமைப்புகளுடன் கூடிய துப்பட்டாக்களும் நெய்யப்பட்டு காண்போரை கவரும் வகையில் வேலைப்பாடுகளுடன் கூடிய பல வண்ணங்களில் தயார் செய்து விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

பெண்களின் நவநாகரிக ஆடைகளுக்கான துணி வகைகள்

பெண்கள் விரும்பி அணியும் சுடிதார், குர்தா ஆகிய ஆடைகளை தைப்பதற்கு ஏற்ற துணி வகைகளை தயார் செய்து கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இவ்வகை துணி வகைகள் 80s X 80s மற்றும் 60s X 60s பருத்தி நூலினைக் கொண்டு பல கண்கவரும் வண்ணங்களில் சாயமிடப்பட்டு நேர்த்தியான வடிவமைப்புகளுடன் கூடிய பார்டர்களைக் கொண்டு அருப்புக்கோட்டை, மதுரை, திண்டுக்கல் மற்றும் கோவைப்பகுதியில் உள்ள கைதேர்ந்த கைத்தறி நெசவாளர்களால் நெய்து விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.இத்துணி 45” அகலத்தில் உற்பத்தி செய்யப்பட்டு வாடிக்கையாளர்கள் தங்களுக்கு ஏற்ற அளவுகளில் ஆடைகள் தைத்துக் கொள்வதற்கு ஏதுவாக தொடர் நீளத்தில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.ஒரு மீட்டரின் விற்பனை விலை = ரூ.140 முதல் =ரூ.224 வரை.

அலங்காரப் பைகள்

பெண்களுக்கு ஆடை மீது உள்ள அதே ஈர்ப்பு ஹேண்ட் பேக்கிலும் உண்டு. தாங்கள் உடுத்தும் ஆடையின் நிறத்துக்கு ஏற்ற நிறத்திலேயே ஹேண்ட் பேக்கை பயன்படுத்தும் பெண்கள் அதிகம். அதை கருத்தில் கொண்டு மங்கையர்களின் மனதை கவரும் வண்ணம், கைத்தறியில் நெய்த துணிகளைக் கொண்டு பல்வேறு விதமான வடிவங்களில், பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்றவாறு பயன்படுத்தும் பிரத்யேகமான அலங்காரப் பைகள் (Fashion Bags) தயாரிக்கப்பட்டு கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.இவ்வகை ஃபேஷன் பேக்ஸ் தயாரிப்பதற்கான துணிகளை சென்னிமலைப் பகுதி யில் உள்ள ஏற்றுமதி ரகங்களை உற்பத்தி செய்யும் கைத்தறி நெசவாளர்கள் பருத்தி நூலினைக்கொண்டு நெய்து பின்னர் பைகளாக வடிவமைத்து அனுப்புகின்றனர். Sling bag, Tote bag, Dome bag, Shoulder bag, Circular bag ஆகியவை தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

ஆடவருக்கான சட்டைகள்

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனமானதுகடலூர் மாவட்டம் காரைக்காடு மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் அத்திமலைப்பட்டு பகுதியைச் சேர்ந்த நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உள்ள கைதேர்ந்த நெசவாளர்களால் நெய்யப்பட்ட சட்டை துணிவகைகளைக் கொண்டு ஆடவருக்கான சட்டைகள் தயார் செய்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. உயர்தரமான இவ்வகை சட்டை துணிகள் தூய 2/100s பருத்திநூலைக் கொண்டு பல வண்ணங்களில் சாயமிடப்பட்டு கோடு மற்றும் கட்டம் வடிவமைப்புகளில்  நெய்யப்பட்டு சட்டைகளாக தைத்து 40” மற்றும் 42” அளவுகளில் வாடிக்கையாளர் ரசனைக்கேற்றவாறு விற்பனைக் குவைக்கப்பட்டுள்ளது.  எக்காலத்திற்கும் ஏற்ற இவ்வகை பருத்தியினால் நெய்த இச்சட்டைகள் மிருதுவாகவும் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றதாகவும் இருக்கும்.ஒரு சட்டையின் விற்பனை விலை = ரூ.784இப்படி பலவிதமான ஆண்-பெண்களுக்கான தரமான புது டிரெண்டுக்கு ஏற்ற ரெடிமேட் ஆடைகளையும் துணி வகைகளையும் கடை விரித்துள்ளது கோ-ஆப்டெக்ஸ்.

-தோ.திருத்துவராஜ்

படம்: ஏ.டி.தமிழ்வாணன்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: