பெண்களுக்கான ஃபேஷன் சாய்ஸ்!

தீபாவளி பண்டிகை என்றாலே சிறியவர் முதல் பெரியவர் வரை கொண்டாட்டம்தான் குதூகலம்தான். அந்தக் குதூகலம் ஒரு மாதத்துக்கு முன்பே பட்டாசு சத்தத்தோடு தொடங்கினாலும் ஒரு வாரம் இருக்கும் வேளையில்தான் புத்தாடைகள் முதல் புது வண்டி வாங்குவது வரை தள்ளுபடி மற்றும் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என சலுகைகளைத் தேடித் தேடி வாங்குவது வழக்கம். அந்த சீசன் வந்தாச்சு, மார்க்கெட்டில் ரகம் வாரியாக டிரெண்டியாக நிறைய புது ஐட்டங்களும் இறங்கியாச்சு. இதில்  2018 தீபாவளி அப்படி என்னவெல்லாம் புதிதாகக் கொண்டு வந்திருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

‘96’ ஜானு

 ‘சக்திமான்’ உடை, ‘சந்திரமுகி’ சேலை, ‘மாஸ்தாணி’ சுடிதார் போல் தீபாவளியின் மற்றொரு ஸ்பெஷல் சினிமா ஸ்டைல் உடைகள்தான். ஏதேனும் ஒரு திரைப்படத்தின் உடை பலரையும் கவர்ந்துவிடும். அந்த வகையில் இந்த வருடம் ரொம்ப சிம்பிளாக சமீபத்தில் வெளிவந்த ‘96’ திரைப்படத்தில் திரிஷா அணிந்துவந்த மஞ்சள் நிற டாப், நீல நிற ஜீன் மற்றும் காட்டன் துப்பட்டா செட் பல ஜவுளிக் கடைகளின் பொம்மைகள் அணிந்து போஸ் கொடுக்கின்றன. ரூ.1500 முதல் செட்டாகவும், தனியாக ஜீன் ரூ.500 டாப் ரூ.600 மற்றும் துப்பட்டா ரூ.200 எனவும் விற்பனையாகின்றன.

லினென் சேலைகள்

சென்ற வருட இறுதியில் அறிமுகமாகி, இந்த வருடம் இளம் பெண்களின் ஹாட் சாய்ஸாக மாறியுள்ளது லினென் புடவைகள். காட்டன் போலவே இதுவும் ஆர்கானிக் வகை, மேலும் லேசாக கட்டுவதற்கு வசதியாக ஏகப்பட்ட கலர்களில் களம் இறக்கியுள்ளனர். ரூ.800 முதல் தொடங்கி ரூ.5000 வரையென தரம்வாரியாக இருக்கும் இந்த லினென் பட்டுடன் இணைந்தும் வரத் தொடங்கியுள்ளது. இவற்றின் சிறப்பே நிறங்கள்தான். கண்களைக் கவரும் பல வண்ணங்களில் லினென் சேலைகள் உள்ளன.

ஆக்ஸிடைஸ்ட் ஒரு பக்கம்... பீட்ஸ் மறுபக்கம்

லினென் சேலைகளுக்கு சிறப்பான மேட்ச் ஆக்ஸிடைஸ்ட் நகைகளும், பீடட் பாசிகளும்தான். ஏனெனில் லினென் கலர்ஃபுல்லான புடவைகளாக வரும் என்பதால் அதற்குரிய மேட்சிங் பீட்களில் சுலபமாக கிடைக்கும். மேலும் தங்கநிற நகைகள் அவ்வளவு பொருத்தமாக இருக்காது. லினென் என்றாலே ஆண்டிக் ஸ்டைல் என்பதால் ஆக்ஸிடைஸ்ட் நகைகளும் சிறப்பான மேட்சிங் கொடுக்கும். பூவுடன் சேர்ந்த நாரும் மணப்பது போல் லினென் புடவைகளுக்கு மேட்சிங்கான இந்த நகைகளும் இந்த வருட தீபாவளி மார்க்கெட்டில் டிரெண்ட் அடிக்கின்றன.

சில்க் ஸ்பெஷல்

சல்வார் பெண்களின் லேட்டஸ்ட் சாய்ஸ் பட்டுத் துப்பட்டா அதனுடன் சேர்ந்து பிளைன் சாட்டின் அல்லது பாகல்புரி சில்க் சல்வார்கள்தான். ரூ.800 முதல் பட்டின் தரத்திற்கேற்ப விற்பனையாகும் இந்தப் பட்டுத் துப்பட்டா சல்வார் செட் வெறும் சல்வார்களாகவும் வருகின்றன. சிலவகைகள் பிரபல பட்டுப்புடவைக் கடைகளில் வெறும் துப்பட்டா மட்டும் வாங்கிக்கொண்டு அதற்கு மேட்சிங்கான உடைகளை டிசைனர் உதவியுடன் வடிவமைத்துக்கொள்ளும் வகைகளிலும் வருகின்றன. துப்பட்டா கலருக்கும் சல்வார் கலருக்கும் சம்பந்தமே இல்லாமல் அணிந்துகொள்வதுதான் சில்க்  துப்பட்டா சல்வார்களின் ஸ்பெஷல். கிராண்ட் உடைகளாக அறிமுகமாகியிருக்கும் இவை செட்டாக ரூ.2000 முதல் ஆரம்பமாகின்றன.

- ஷாலினி நியூட்டன்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: