×

வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சல் : சேலம் அரசு மருத்துவமனையில் 6 பேர் அனுமதி

சேலம்: தமிழகம் முழுவதும் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் எச்1என்1 வைரசால் உருவாகும் இன்புளுயன்சா எனப்படும் பன்றிக்காய்ச்சலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் பழநியைச் சேர்ந்த மணிகண்டன், மதுரையைச் சேர்ந்த மீனாட்சி ஆகிய இருவர் பன்றிக்காய்ச்சல் பாதித்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டத்திலும் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது. இதுவரை எச்1என்1 அறிகுறியுள்ள 6 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அறிக்கைக்காக மருத்துவர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த எச்1என்1 வைரசானது, பன்றியிலிருந்து தோன்றினாலும், காற்றின் மூலம் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவுகிறது. இருமும் போதும், தும்மும்போதும் இக்காய்ச்சல் எளிதில் மற்றவர்களுக்கு பரவும். எனவே, காய்ச்சல் பாதித்தவர்கள் கைக்குட்டையை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பன்றிக்காய்ச்சல் உயிர்க்கொல்லி நோய் இல்லை என்றபோதிலும், உரிய சிகிச்சைகள் மேற்கொள்ளாவிட்டால் உயிரிழப்பை சந்திக்க நேரிடும். காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம், கடும் வாந்தி, உடல்சோர்வு, தொண்டை வலி போன்றவை இதன் அறிகுறிகளாகும். இவை தென்பட்டால், உடனடியாக தகுதிவாய்ந்த மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம்.

பன்றிக்காய்ச்சலுக்கென இதுவரை தடுப்பூசி எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. மாறாக, டாமிபுளூ என்ற மாத்திரை மூலம் நோய் பரவுவதை கட்டுப்படுத்தலாம் என்பதால், நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சுற்றுப்புறத்தை சேர்ந்தவர்களுக்கு இந்த மாத்திரை வழங்கப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சலை தடுப்பதற்கான போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில் நடத்தப்பட்ட கை கழுவும் நிகழ்ச்சி கூட, சாதனை நோக்கத்தோடு பெயரளவிற்கு நடத்தப்பட்டதே தவிர, அதுகுறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு கூட தெரியப்படுத்தப்படவில்லை. பன்றிக்காய்ச்சலின் அறிகுறிகள், தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு தகுந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில்,”பாதிப்புக்குள்ளானவர்களிடம் உரிய பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னரே, பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதிசெய்யப்படும். பொதுமக்கள் இதுகுறித்து பீதியடையாமல், பாதிப்பு அறிகுறி தெரிந்தவுடனே, அரசு மருத்துவர்களிடம் சென்று சிகிச்சை பெற வேண்டும். சேலம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு வழங்க 40 ஆயிரம் டாமிபுளூ மாத்திரைகள் இருப்பில் உள்ளன. மேலும், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில்,பன்றிக்காய்ச்சலுக்கென தனி வார்டு ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எச்1என்1 பாதிப்பு இருந்தால், அதுகுறித்து உடனடியாக தகவல் தெரிவிப்பதுடன்,அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்ய தனியார் மருத்துவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது,” என்றனர்.

குழந்தைகள், கர்ப்பிணிகளை எளிதில் பாதிக்கும்

நோய் எதிர்ப்பு திறன் குறைவு என்பதால், குழந்தைகளுக்கு எளிதில் பன்றிக்காய்ச்சல் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், கர்ப்பிணிகள், வயது முதிர்ந்தவர்கள், ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு, இந்நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும். எனவே, இவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். கைக்குட்டையை பயன்படுத்தவும், கைகளை சுத்தமாக வைத்திருக்கவும்,குழந்தைகளுக்கு பெற்றோர் அறிவுறுத்த வேண்டும்  என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Salem ,government hospital , Swine Flu, Salem, Government Hospital
× RELATED சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே...