×

கூட்டுறவு சங்கங்களில் உரம் தட்டுப்பாடு : கூடுதல் விலைகொடுத்து வாங்கும் விவசாயிகள்

கோவில்பட்டி: கோவில்பட்டி, விளாத்திகுளம், கயத்தாறு வட்டார கிராமங்களில் தற்போது மானாவாரி பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் யூரியா உரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கூடுதல் விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். கோவில்பட்டி, விளாத்திகுளம், கயத்தாறு, ஓட்டப்பிடாரம், எட்டயபுரம் ஆகிய வட்டாரங்களில் பருவமழை பெய்து வருவதையொட்டி புரட்டாசி பருவத்தில், விவசாயிகள் தங்களது மானாவாரி விளைநிலங்களில் உளுந்து, பாசிப்பயறு, கம்பு, சோளம், பருத்தி, வெள்ளைச்சோளம், மக்காச்சோளம், குதிரைவாலி, வெங்காயம், மிளகாய் போன்ற பயிர்களை சாகுபடி செய்துள்ளனர்.

இப்பயிர்களுக்கு அடியுரமாக ஏக்கருக்கு 50 கிலோ கொண்ட ஒருமூடை டிஏபி உரம் தூவப்பட்டுள்ளது. தற்போது இப்பயிர்கள் ஒரு அடி உயரம் வரை வளர்ந்துள்ளது. மேலும் அனைத்து வட்டார கிராமங்களிலும் பரவலான மழை பொழிந்து வருகிறது. இதனால் மேலுரமாக யூரியா உரம் தூவவேண்டும். ஆனால் தனியார் உரக்கடைகளில் அரசு உத்தரவை மீறி ஒரு மூடை யூரியா உரம் ரூ.265க்கு பதில் ரூ.350 வரை கூடுதல் விலை கொடுத்து விவசாயிகள் வாங்கி வருகின்றனர். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமும் முறையாக உரம் விநியோகம் செய்யப்படவில்லை.

இந்தாண்டு இந்த வட்டார பயிர் நிலப்பரப்பில் 80 சதவீதம் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. கதிர் பிடிக்கும் பொதி பருவத்தில் பொட்டாஸ், வேப்பம்புண்ணாக்கு டிஏபி உரம் கலந்து ஒவ்வொரு பயிரின் வேர் அடிப்பாகத்தில் இட வேண்டும். ஆனால் தனியார் கடைகளில் அதிக விலை கொடுத்து பொட்டாஸ் உரம் வாங்க வேண்டிய நிலையை தவிர்க்க கோவில்பட்டி, விளாத்திகுளம், கயத்தாறு, ஓட்டப்பிடாரம், எட்டயபுரம் ஆகிய வட்டாரங்களில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் தேவையான அளவு இருப்பு வைக்க வேண்டும். எனவே யூரியா, பொட்டாஸ் உரம் போன்றவைகளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்சங்கங்களில் தட்டுப்பாடின்றி கிடைக்கவும், விடுமுறை நாட்களிலும் உரங்களை விநியோகம் செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மானாவாரி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pricing Farmers , Fertilizers, prices, farmers
× RELATED தமிழ்நாட்டில் தீவிர வெப்ப அலை...