டெங்கு, பன்றிக் காய்ச்சலைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை: சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

சென்னை: பருவக் காலங்களில் ஏற்படக்கூடிய டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் ஆகியவற்றிற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் புற்று நோயின் கடைசி நிலையில் ஏற்படுகின்ற வலி மற்றும் வலி நிவாரணத்திற்கான சிகிச்சை முறைகள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன், மார்பக புற்றுநோயை தடுக்க பெண்கள் சுய பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்றுக் கூறினார். ஆரம்ப காலத்திலேயே மருத்துவரை அணுகினால் அவற்றை குணப்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார். அதன் பிறகு பேசிய அவர், பெங்களூரு மற்றும் சித்தூரை தொடர்ந்து தமிழகத்திலும் பரவலாக பன்றி காய்ச்சல் பரவி வருவதாக தெரிவித்தார். இதற்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக, மாநிலத்தின் எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெறுவதாக அவர் கூறினார். அதேபோல தேவையான அளவிற்கு மருந்துகளும், தடுப்பூசிகளும் இருப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பொது இடங்களுக்கு சென்று விட்டு திரும்பியவுடன் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். மேலும் காய்ச்சல், தொண்டைவலி போன்ற அறிகுறிகள் இருந்தால் மக்கள் தானாக மருந்து உட்கொள்ளாமல், மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும் என வலியுறுத்தினார். இதையடுத்து போர்க்கால அடிப்படியில் அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார். இதனிடையே கன்னியாகுமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் உட்பட இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இரட்டை குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் பரவிவரும் பன்றி மற்றும் டெங்கு காய்ச்சலால் மக்கள் பெரும் அச்சத்திற்குள்ளாகப்பட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: